Top >>Temples >>ஐயப்பன் திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
06. இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு

06. இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை - தமிழ்நாடு

 

இராஜ அண்ணாமலைபுரம் - சென்னை

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் கடற்கரை வழியாக அடையாறு செல்லும் பாதையில் இத்தலம் உள்ளது.

ஆலயம் உருவான வரலாறு பற்றி ஆலயத்தின் அருட்கொடையாளர் மு.அ.மு. ராமசாமி கூறியதாவது : 
     வடசபரி என்று அழைக்கப்படும் ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு ஐயப்ப சுவாமித் திருக்கோயில் உருவாக்க என் உள்ளத்தில் ஒளிப்பிழம்பாக ஐயப்பன் தோன்றிய நாள் 22.12.1973. ஆம்! அன்றுதான் தென் சபரியில் அமர்ந்து சாதிமத பேதமின்றி அனைவருக்கும் அருள்பாலித்து வரும் ஐயப்பனை நான் தரிசித்த நாளாகும்.

காடு  மலை கடந்து ஐயனைத் தரிசிக்க இயலாமல் போகும் தமிழக மக்களுக்காக தமிழகத்தின் தலை நகரில் தருமமிகு சென்னையில். ஐயப்பனுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்று அவன் சந்நிதியிலேயே என்னை எண்ண வைத்தவன் ஐயப்பன் என்றால் அது மிகையில்லை.

என் உள்ளத்தில் தோன்றிய இக்கருத்தை என்னைச் சபரிமலைக்குச் அழைத்துச் சென்ற குருசாமி திரு. சம்பத்குமார் அவர்களிடமும் என்னுடன் அங்கு வந்தவர்களிடமும் கூறிய போது, அவர்கள் என் எண்ணத்தைப் பாராட்டி ஆமோதித்தனர்.

 இச்செயலை அறிந்த என் தந்தையார் செட்டி நாட்டு அரசர் முத்தையவேள் அவர்கள் கோயில் அமைப்பதற்கு வேண்டிய இடத்தை நன்கொடையாக தந்து உதவினார்கள். ஒரு நல்ல நாளில் கோயில் அமைக்கக் கால்கோள் விழாவும் நடைபெற்றது. கேரளச்சபரியில் உள்ள 18 படிகளைப் போலவே இங்கும் 18 படிகளுடன் திருக்கோயில் அமைக்கப் பெற்று ஐயப்பன் சந்நிதியுடன் கன்னிமூலை கணபதி நாகராசன் மஞ்சமாதா சின்னக்கடுத்தசாமி கருப்பாயி பெரிய கடுத்தசாமி ஆகிய தெய்வச் சந்நிதிகள் முறையுடன் அமைக்கப்பட்டன. சபரிமலைக் கோயிலைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதற்காகப் பல முறை சபரிக்கு சென்று ஆராய்ந்தும் அளவு எடுத்தும் இவ்வாலயம் சபரிக்கோயிலை மறுபதிப்பாக உருவாக்கப்பட்டது.

 ஐயப்பன் மூல விக்கிரகத்தை நாகர்கோயிலில் உள்ள சிறந்த சிற்பியான திரு. பட்டன் ஆசாரி என்பவர் ஐம்பொன் உலோகத்தால் சிறப்பாகச் செய்து தந்தார். இத்திருஉருவம் தென்தமிழகத்தின் வழிபாட்டுத் தலங்கள் வழியாக வலம் வந்து அப்பகுதி மக்களால் ஆராதனையும், வழிபாடும் செய்யப்பட்டு சென்னைக்கு 9.02.1981 அன்று வந்து சேர்ந்தது.

29.01.1982 அன்று சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு மகாசந்நிதானம் ஸ்ரீ சந்நிதானம் ஆகியோரின் முன்னிலையில் முதல் குடமுழுக்கு வழா இனிது நடைபெற்றது. ஆண்டுதோறும் சபரிமலைக்குச் சென்று வரும் நான் ஊரிலில்லாத நாட்கள் தவிர மற்ற நாட்களில் வடசபரி ஐயனைத் தரிசிக்க தவறியதில்லை.

 இத்திருக்கோயில் மண்டலபூஜை, மகரஜோதி தரிசனம், பிரம்மோத்சவம், விஷுகனி தரிசனம் ஆகியவை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி தாங்கி 18 படியேறி நெய்யபிஷேகம் செய்து ஐயப்பனைத் தரிசித்து வருகிறார்கள். மற்ற பக்தர்களும், பெண்களும் ஐயப்பனைத் தரிசித்து அவனருள் பெற 18 படிகள் தவிர தனிப்படி வழி ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

 இத்திருக்கோயில் அமைந்து பன்னிரண்டாண்டுகள் நிறைவு பெற்றதால் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு 27.03.1994 ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் குடமுழுக்கு விழா நடைபெறுகின்றது. இவ்வாலயத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள வெள்ளிரதம் இந்த இரண்டாம் குடமுழுக்கு விழாவின் சிறப்பம்சமாகும்.

தென்சபரி போன்ற வடசபரி : சபரிமலையில் உள்ளதுபோலவே வித்தகம் மிகுந்த சக்திகளால் உயர்ந்த பதினெட்டுப் படிகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் விரதம் இருந்து இருமுடி தாங்கிவரும் பக்தர்கள் இந்த படிகள் மூலம் வந்து அண்ணாமலைபுரம் ஐயப்பசாமியைத் தரிசிக்கலாம். கன்னிமூல மகாகணபதி, நாகராஜா மாளிகைபுரத்து அம்மன் ஆகிய பரிவார தேவதைகளுக்கும் இங்கே தனித்தனியாக கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நம்முன்னோர்கள் தில்லையம்பலத்து இறைவன் கோயில் கோபுரத்திற்குப் பொன் வேய்ந்ததுபோல இந்த ஆலயத்துக் கோபுரங்களுக்குச் செம்பொன்னால் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மூன்று தளங்களாக அமைக்கப்பட்டிருப்பதால் மூலஸ்தானம் மலைமேல் இருப்பது போன்றே தோன்றுகிறது. இந்த ஆலயத்தைப் பார்த்தால் சபரி ஆலயத்திற்கு வந்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றும் வகையில் சகல அம்சங்களும் நிறைந்து அமைந்துள்ளன.

 விரதம் இருந்து இருமுடி தாங்கி பதினெட்டுப் படி வழியாக வரும் பக்தர்கள் தவிர மற்ற பக்தர்கள் ஒருபுறம் ஏறிச்சென்று ஐயப்பசாமியை வழிபட்டு மறுபுறம் வரும் வகையில் இரு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விபரங்களை அறிய றறற.லைலயியளறயஅ.உழஅ என்ற இணையதளத்தை அணுகவும்

 

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : சென்னை

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு


 

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​