Top >>Temples >>ஆறுபடைவீடு - 6
3:30:05 PM         Monday, August 25, 2014 
06. திருத்தணி

06. திருத்தணி

திருத்தணி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இத்தலம். முருகபெருமான் மணம் புரியும் பொருட்டு வந்து தங்கிய மலை தணிகை மலை ஆகும்.

தலவரலாறு : முருகனின் ஆறுபடைவீடுகளில் இது ஐந்தாம் படைவீடாக கருதப்படுகிறது. திருத்தணிகை மலையின் உயரம் 400 அடி ஆகும். வள்ளியின் உறவினர்களாகிய வேடர்களுடன் போரிட்டு, கோபம் தனிந்த இடம் திருத்தணி ஆகும். இங்கு மூலவராகிய முருகன் வள்ளி, தெய்வானையுடன் சமேதராக காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். இதற்கு தணிகைமலை என்ற பெயரும் உண்டு. தணிகைமலையின் வடபகுதியில் உள்ள மலை வெள்ளையாக காணப்படுவதால் 'பச்சரிசி மலை' எனவும், தெற்கே உள்ள மலை கருப்பாக காணப்படுவதால் 'பின்னக்கு மலை' எனவும் வழங்கப்படுகிறது. இங்கு நடைபெறும் திருப்படித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும்.  
 
 ஒருசமயம் அருணகிரிநாதர் திருப்புகழை பாடிக்கொண்டே தணிகைமலையை சுற்றி வரும்பொழுது அவரை பார்த்த சிலர் கேலி செய்தனர். அருணகிரிநாதர் மனகஷ்டத்துடன் "சினத்தவர் முடிக்கும்.." என்ற திருப்புகழின் நான்கு வரிகளை பாடிக்கொண்டிருக்கும் போது அவரை கேலி செய்தவர்கள் எரிந்து சாம்பலானார்கள். கருணையே உருவான அருணகிரிநாதர் அப்பாடலின் அடுத்த நான்கு வரிகளை பாடிய பொழுது எரிந்து சாம்பலானவர்கள் மீண்டும் உயிர்பெற்றெழுந்தனர். இவ்வாறு திருவிளையாடல் புரிந்த தலமே திருத்தணிகையாகும்.

கோயில் அமைப்பு : தணிகை மலையடிவாரத்திலிருந்து மலை ஏறிச் செல்லும் பாதையில் வடபக்கத்தில் பிரம்மசுனை என்று வழங்கப்பெறும் பிரம்ம தீர்த்தமும், அதன் அருகில் விநாயகர், பிரம்மலிங்கம் முதலியோர் கோயிலும் உள்ளன. இத்தீர்த்தத்தின் அருகில் பிரம்மதேவன், முருகப்பெருமானை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலை பெற்றதாகப் புராணம் கூறுகின்றது. தணிகை மலையின் உச்சியை அடைந்ததும்  நான்காவது பிரகாரமாகிய இரதவீதியின் கிழக்கு பாகத்தைக் காணலாம். இங்கு இந்திர நீலச் சுனை என்னும் சுனையும், விஷ்ணு தீர்த்தம், நாகதீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. இதன் கிழக்கு வாயில் வழியாக சென்றால் மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இங்கு கீழ்ப்பாகத்தில் கொடிமர விநாயகரையும், ஐராவதத்தையும், தெற்குப் பாகத்தில் உமாமகேசுவரர் சந்நிதியையும், மேற்கு பாகத்தில் உச்சிப்பிள்ளையார் சந்நிதியையும் கண்டு வழிபடலாம். இரண்டாவது பிரகாரத்தில் தெற்குப் பக்கத்தில் ஏகாம்பரேசுவரர் சந்நிதியும், மேற்கு பக்கத்தில் ஆறுமுக சுவாமி சந்நிதியும் வடக்கு பக்கத்தில் முருகனால் வழிபடப் பெற்ற குமரேசுவரலிங்கத்தின் சந்நிதியும், உருத்திராக்க விமானத்தில் அமைந்துள்ள பெரிய உற்சவமூர்த்தியின் சந்நிதியும் அமைந்துள்ளன. பஞ்சராட்சர படிகள் என்ற ஐந்து படிகள் முதற்பிரகாரத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இங்கு தென்பகுதியில் வள்ளியம்மன், வடக்கு பகுதியில் தெய்வானை சந்நிதியும், மேற்கே முருகன் சந்நிதியும், வடக்கு பகுதியில் சண்டேசுவரர் பைரவர் சந்நிதியும் அமைந்துள்ளன.

விமானதளம் : சென்னை

ரயில் நிலையம் : திருத்தணி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​