Top >>Temples >>ஆறுபடைவீடு - 6
3:30:05 PM         Monday, August 25, 2014 
03. திருப்பரங்குன்றம்

03. திருப்பரங்குன்றம்

                                                                                                            திருப்பரங்குன்றம்                                                                                                                                                                                                            

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் தலைநகரான மதுரைக்கு தென்மேற்கே சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவலிங்கம் போல் அமைந்துள்ள இம்மலையில் எழுந்தருளியுள்ள முருகனை சிவனே என்று எண்ணி வழிபடுவோர்க்கு நன்மை கிட்டும் என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

தலச்சிறப்பு :  நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடியது இங்கேதான். இது அறுபடைவீடுகளில் முதல் படைவீடாக விளங்குகின்றது. சூரனை வதைத்து, தேவர்களை சிறைமீட்டு, இந்திரன் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்ட முருகன் இங்கு மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது ஒரு குடைவரைக்கோயில். லிங்க வடிவில் பரங்கிரி நாதரே மூலவர். ஆயினும் கோயிலில் முதலிடம் முருகனுக்கே விநாயகர், விஷ்ணு, துர்க்கை, சனிபகவான் முதலியவர்க்கும் இங்கு கோயில்கள் உள்ளன. கோயிலின் முகப்பு மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 48 பெருந்தூண்கள் நிற்கின்றன.                                                                                                

தலவரலாறு : திருச்செந்தூரில் சூரபத்மனை அழித்து, தேவர்களை காத்த முருகனுக்கு நன்றிக்கடன் செலுத்த எண்ணிய இந்திரன் தனது மகள் தேவசேனாதேவியை மணமுடிக்க விரும்பினான். இந்த திருமணம் நடந்த இடம்தான் திருப்பரங்குன்றம். இத்திருமணத்தை பிரம்மாவே நடத்தியதாக புராணங்கள் கூறுகின்றன.

 தமிழ்சங்கபுலவரான நக்கீரர் சிவபெருமானிடம் வாதாடினார். தான் வாதாடிய பாவத்திற்காக அப்பாவத்தினை போக்குவதற்காக தீர்த்த யாத்திரை செல்லும் போது திருப்பரங்குன்றில் உள்ள ஒரு குளக்கரையின் அருகில் உள்ள மரத்தடியில் சிவபூஜை செய்யும் போது ஒரு அதிசயத்தை கண்டார். குளத்தில் ஒரு இலைவிழுந்தது. அவ்விலை இரண்டாக பிளந்து ஒருபகுதி மீனாகவும், மற்றொருபகுதி பறவையாகவும் மாறுவதை கண்டார். இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் சிவபூஜையை மறந்துவிட்டார். அப்போது கற்றமுகி என்ற தூத அரக்கி நக்கிரரை பிடித்து மலையிலே உள்ள ஒரு குகைக்குள் தள்ளிவிட அக்குகையில் ஏற்கனவே 999 பேர் அடைபட்டுகிடந்தனர். நக்கீரரை சேர்த்து 1000 பேர் அடைபட்டுகிடந்தனர். நக்கீரர் இதிலிருந்து விடுபட முருகனை மனமுருக வேண்டி திருமுருகாற்றுப்படை என்ற பாடலை பாடினார். அவர்முன் முருகன் தோன்றி தனது கூர் வேலால் மலையை இரண்டாக பிளந்து கற்றமுகி அரக்கியை கொன்று அவர்களை விடுவித்தார். தேவயானை சமேதராக முருகர் அங்கே அனைவருக்கும் காட்சி புரிந்தார். அவ்விடமே திருப்பரங்குன்றமான இத்தலம் ஆகும்.                                                                                                                                                                                                                                                               கோயில் அமைப்பு : இக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும்.. கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.

 மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோயில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன. கருவறையில் ஒரு பெரிய பாறை,. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார். மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.  மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன. இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர். மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன. கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோயில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார். மூலவர் திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார். இப்பெருமானின் திருமணச்சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

 பரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலியினால் உண்டாக்கினார் எனக் கூறுவர். திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோயில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன. இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று உள்ளது. அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன. இப்பரங்குன்றத்தில் எம்பெருமான் முருகனுக்கு தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது..

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : மதுரை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​