Top >>Temples >>ஆறுபடைவீடு - 6
3:30:05 PM         Monday, August 25, 2014 
02. பழனி

02. பழனி

                                                                                             பழனி                                                                                                                                                                                                                                                   

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு  மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  மேலும் திண்டுக்கல் - கோவை வழியில் திண்டுக்கல்லிலிருந்து 56 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர் : தண்டாயுதபாணி

தீர்த்தம் : வையாபுரித் தீர்த்தம்

திருத்தலச் சிறப்புகள் : இத்தலம் முருகனின் ஆறுபடை வீடுகளுள் மூன்றாவது படைவீடாக விளங்குகிறது. இத்தலத்தின் நகரப்பகுதி திருஆவினன்குடி என்றும் மலைப்பகுதி பழநியாகவும் இன்று அமைந்துள்ளன. இவ்விரண்டையும் இணைத்தே பழநி என்னும் பெயரால் வழங்கப் பெற்று வருகின்றது. இத்தலத்திற்கு சித்தன் வாழ்வு என்னும் பெயரில் ஒரு திருப்பெயரும் உண்டு. இத்தலத்தின் வடகிழக்கில் சிறிது தொலைவில் சரவணப் பொய்கை உள்ளது இப்பொய்கையில்  நீராடியே கோயிலுக்குள் செல்ல வேண்டும். இக்கோயிலில் முருகபெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமி என்னும் திருப்பெயருடன் காட்சி தருகிறார். இவ்வேலாயுத சுவாமியை கண்டு வழிபட்ட பின்னரே மலைக் கோயிலாகிய தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல வேண்டியது முறையாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விசேஷமானது. இம்மலைக்கு எதிரில் சிறிது தொலைவில் இடும்பன் மலை காணப்படுகிறது. பழநிமலைக்கு சிவகிரி என்றும் இடும்பன் மலைக்கு சக்திகிரி என்ற பெயரும் உண்டு.                                                                                                   

 மலைமேல் உள்ள முருகர் போகர் என்னும் சித்தரால் என்றும் அழியாத ஒன்பது பாஷாணங்களை உருவாக்கி ஒன்று சேர்த்து அமைக்கப் பெற்றவர். எப்போதும் அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கும். முருகபெருமானின் திருமேனியில் தோய்ந்த அபிஷேகப் பொருட்கள் தீராத நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் உடையது. குன்மம், குட்டம் போன்ற தீராத நோய்களையும் தீர்க்கக்கூடியது. பழனிப் பஞ்சாமிர்தமும், முருகன் திருவடிகளில் அப்பி வைத்த சந்தனமும் அளவிட முடியாத ஆற்றல் வாய்ந்தவை.

 இரவு அர்த்த ஜாமத்தில் தண்டாயுதபாணியின் மேல் சாத்தப்படும் சந்தனமும், கவுவீன தீர்த்தமும் அடுத்தநாள் அதிகாலையில் நிகழும் விசுவரூப பூஜைக்குப் பின் வழங்குவர். இவை தீராத நோயையும் தீர்க்கும் மருத்துவ குணமுடையவை. தண்டாயுதபாணியின் திருமேனியில் பட்ட விபூதியும் பன்னீரும் அபிஷேகப் பாலும், பஞ்சாமிர்தமும் சிறப்புமிக்கவை.                                                                                                                                                                                                                                            

400 அடி உயரமுள்ள இம்மலையின் (சிவகிரி) அருகில் இடும்பன் மலை உள்ளது. இதை 'சக்திகிரி' என்பர். மலையடிவாரப் படிக்கட்டின் தொடக்கத்தில் பாத விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்கள் உள்ளன. மலைமேல் செல்ல ரயில் பாதையும், யானைப் பாதையும், உள்ளன. 700 படிகள் உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்டட அழகிய ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகின்றது.


பெயர் காரணம் : ஒருசமயம் நாரதர் கனி ஒன்றை கொண்டுவந்து சிவமைந்தர்களான முருகன் விநாயகரிடம் உலகினை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு இந்த கனி கொடுக்கப்படும் என்று கூற விநாயகர் அண்ட சராசரங்களையும் ஆளக்கூடிய தாய் தந்தையரே உலகம் என்று கருதி சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து அக்கனியை பெற்றுக்கொள்கிறார். உலகினையெல்லாம் சுற்றிவந்த முருகன் கனி சகோதரரான விநாயகருக்கு கிடைக்கப்பெற்றதை அறிந்து கோபம் கொண்டு நெல்லி வனமாக இருந்த மலை மீதே முருகன் தங்கி விடுகிறார். பின் தாய்தந்தையரான சிவனும், பார்வதியும் வந்து முருகா! உனக்கு பழம் தானே வேண்டும் எங்களுக்கெல்லாம் பழம் நீ அல்லவா என்று கூற பழம்  நீ  - பழநி என பழனி ஆயிற்று. பழநியை சுற்றியுள்ள ஊருக்கு 'திருஆவினன்குடி' என்று பெயர் எனவே இதற்கு திருஆவினன்குடி என்ற மற்றொரு பெயரும் உண்டு.                                                                                                         தலவரலாறு : மகாவிஷ்ணுவின் கோபத்திற்கு ஆளான மகாலெட்சுமி, பூமாதேவி, விஸ்வாமித்திரரின் சாபத்திற்கு ஆளான காமதேனு, ஈசனின் சாபத்திற்கு ஆளான சூரியன், அக்னி இவர்கள் அனைவரும் தங்களுக்கு விமோசனம் கிடைப்பதற்காக நெல்லி வனமான மலையிலே முருகனை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். முருகனும் அவர்களுக்கு விமோசனம் அளிக்கிறார். முருகனால் விமோசனம் அடைந்த இவர்களின் பெயர்களாலயே திருஆவினன்குடி என்ற பெயர் உருவாகிற்று. திரு என்றால் லெட்சுமி ஆ - காமதேனு இனன் - சூரியன் கு - பூமாதேவி டி - அக்னி என திருஆவினன்குடி என வழங்களாயிற்று. இடும்பாசுரன் என்பவன் சூரபத்மனின் குருநாதர். அவன் சூரபத்மனுக்கு பல கலைகளை கற்றுக் கொடுக்கிறான். சூரபத்மனின் தொல்லை தாங்காமல் இடும்பாசுரன் அவனது குருவான அகஸ்தியரிடம் போய்விடுகிறான். அகஸ்தியர் இடும்பாசுரனுக்கு ஒரு அன்புக்கட்டளையிடுகிறார். தான் வழிபடுவதற்காக கையிலையிலிருந்து சிவகிரி, சக்திகிரி என இரண்டு கிரிகளை கொண்டுவா என்று கட்டளையிடுகிறார். இடும்பாசுரன் இடும்பையேடு சென்று, தனது பிரம்மதண்டத்தில் ஒருபக்கம் சிவகிரி, மறுபக்கம் சக்திகிரி இரண்டையும் தோளில் சுமந்து கொண்டு வருகிறான். களைப்பு மிகுதியால் திருஆவினன்குடி வந்தவுடன் அதை கீழே இறக்குகிறான். பின் இளைப்பாறிய பிறகு சிவகிரி, சக்திகரி மலைகளை தூக்க முயிற்சிக்கிறான். தூக்க முடியவில்லை. சிவகிரி மேலே முருகன் அமர்ந்திருக்க அவரை கீழே இறங்கச் சொல்கிறான். அவர் இறங்க மறுக்க சினம் கொண்ட இடும்பன் அவரை கம்பால் அடிக்க முயல, அவன் மயங்கி விழுகிறான். பின் இடும்பையும், அகஸ்தியரும் முருகனிடம் சென்று முறையிட முருகன் இடும்பனை மயக்கம் தெளிந்து எழச்செய்கிறான். இடும்பாசுரனின் குருபக்தியை மெச்சி இடும்பனையே தனது காவல் தெய்வமாக ஆக்கிக்கொள்கிறார். இதனால்தான் பழநி மலை அடிவாரத்தின் கீழ் இடும்பனின் கோவில் இன்றளவும் காணப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இன்றளவும் முருகனுக்கு காவடி எடுப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் முருகன் அருளுகிறார் என்பது மக்களின் நம்பிக்கை.                                                                                                                                                                                                                                                                                         

கோயில் அமைப்பு : பழநிமலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ தொலைவிற்குச் சோலைகள் நிறைந்த அழகிய மலைப் பிரகாரம் அமைந்துள்ளது. இப்பிரகாரத்தின் திருப்பங்களில் மயில் உருவச் சிலைகளையுடைய மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மலையடிவாரத்தில் படிக்கட்டுப் பாதையின் தொடக்கத்தில் பாதவிநாயகர் கோயிலும், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்களுடைய சிலைகளும் அமைந்துள்ளன. பாதவிநாயகர் கோயிலை அடுத்து பெரிய மண்டபம் அமைந்துள்ளது இம்மண்டபத்தில் கண்ணப்பர் தெய்வயானை திருமணம், சூரசங்கார சுப்பிரமணியர், வீரவாகுதேவர் ஆகியோரின் சிற்பங்கள் கலைநுட்பம் வாய்ந்தவையாக காட்சியளிக்கின்றன. மலைமீது ஏறிச்செல்பவர்கள் இளைப்பாறுவதற்கான மண்டபங்கள் படிக்கட்டு பாதையில் இடையிடையே அமைக்கப்பட்டுள்ளன. பாதையின் வழியே விநாயகர் இடும்பன் சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு செல்வதற்குப் படிகட்டு பாதை தவிர யானைப்பாதை, இழுவை ரயில், தொங்கு கயிறு வண்டி (ரோப் கார்) ஆகியவையும் உள்ளன. இம்மலையின் உச்சியில் எம்பெருமான் தண்டாயுத பாணியின் திருக்கோயில் இரண்டு அகலமான பிரகாரங்களுடனும் ஐந்து நிலைகள் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடனும் அமைந்து விளங்குகிறது. இரண்டாம் பிரகாரத்திலிருந்து கோயிலுள் செல்லும் வழியில் மணிக்கட்டு மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் அருகில் வல்லப விநாயகர் சந்நிதியும், கொடிமரமும், அக்கினி குண்டமும் ,தங்கரதம் இருக்கும் மண்டபமும் அமைந்துள்ளன.

 மணிக்கட்டு மண்டபத்தை அடுத்துள்ளது நாயக்கர் மண்டபம். இம்மண்டபத்தில் சுப்பிரமணிய விநாயகர், நக்கீரர், அருணகிரிநாதர் சந்நிதிகள் அமைந்துள்ளன. ராஜகோபுர வாயிலைக் கடந்தவுடன் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பாரவேல் மண்டபமும், நவரங்க மண்டபமும் அமைந்துள்ளன. பாரவேல் மண்டபத்திலிருந்து முதல் பிரகாரம் சுற்றிச் சென்று தண்டாயுதபாணி திருச்சந்நிதியை அடைகிறது. முதல் பிரகாரத்தின் வடபாகத்தில் மலைக்கொழுந்தீசுவரர், அம்பிகை நவவீரர்கள் முதலியோர் சந்நிதிகளும் தென்பாகத்தில் சப்தகன்னியர், கைலாசநாதர், சண்டிகேசுவரர் முதலியோர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தென்கிழக்குப் பாகத்தில் பதினென்சித்தர்களுள் ஒருவரான போகருக்குக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.  இக்கோயிலில் போக சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட புவனேசுவரி, மரகதலிங்கம் உருவங்கள் காணப்படுகின்றன. இங்கு ஒரு சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இப்பாதை தண்டாயுதபாணியின் திருவடிவரை செல்கின்றதென்றும் இச்சுரங்கப்பாதையுள் சென்ற போகர் திரும்பிவராமல் முருகனின் திருவடிப் பேற்றினை எய்தினாரென்றும் கூறப்படுகிறது. நவரங்க மண்டபத்தின் ஆரம்பத்தில் உலோகத்தால் அமைக்கப்பட்ட சேவற்கொடி காணப்படுகிறது. அடிக்கடி ஓர் உயிருள்ள சேவல் இக்கொடி மீது வந்து அமர்ந்து கூவுகின்றது. இது இத்தலத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று ஆகும். இச்சேவற்கொடிக்கு சற்று தொலைவில் தட்சிணாமூர்த்தி கோயில் அமைந்துள்ளது வேலைப்பாடுகள் நிறைந்த பன்னிரண்டு தூண்களைக் கொண்ட நவரங்க மண்டபத்தில் நடராசர் நவவீரர்கள் வேலாயுத விசுவநாதர் முதலிய உற்சவ மூர்த்திகள் காட்சி தருகின்றனர். இங்கு சண்முகருக்கும் தண்டாயுதபாணி உற்சவமூர்த்திக்கும் தனிச்சந்நிதிகள் உள்ளன. நவரங்க மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன. கருவறை மீது உள்ள விமானம் பொன்னால் வேயப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கிறது. முருகப்பெருமான் கருவறையினுள் பாலமூர்த்தியாக கோவணாண்டியாக தண்டாயுதபாணியாக அருள் பொழியும் திருநோக்குடன் ஒரு கரத்தில் தண்டு ஏந்தி மறுகரத்தை இடையில் அமர்த்தி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு பங்குனி மாதம் நடைபெறம் உத்திரப் பெருவிழா மிகவும விசேஷமாக கருதப்படுகிறது.

 

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : பழனி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​