Top >>Temples >>ஆறுபடைவீடு - 6
3:30:05 PM         Monday, August 25, 2014 
01. திருச்செந்தூர்

01. திருச்செந்தூர்

                                                                                              திருச்செந்தூர்                                                                                                                                                                                                                            திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்றும் மாநிலத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. திருநெல்வேலிக்கு கிழக்கில் 56 கி.மீ தொலைவில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது.

மூலவர் : திருச்செந்தில் ஆண்டவர்

தீர்த்தம் : கடல் நாழிகிணறு                                                                                                                                                                                                                                                                                                          

திருத்தலச்சிறப்புகள் : இங்கு மூலவர் நவகிரகநாயகர்களில் ஒருவராகிய குரு அம்சமாக திகழ்கிறார். திருச்செந்தூருக்கு 'திருச்சீர்அலைவாய்' என்ற மற்றொரு பெயர் உண்டு. கடல் அலைகளால் தழுவப்பட்ட காரணத்தால் 'அலைவாய்' என்பது 'திரு' வுடன் சேர்ந்து கொண்டு 'திருச்சீர்அலைவாய்' என்று வழங்கலாயிற்று. சூரபத்மனை அழித்த தலம். முருகனின் ஆறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாக அமைந்து விளங்குகின்றது. இத்தலம் இடைவிடாது

தலவரலாறு : கர்வம் தலைக்கேறி திரிந்த சூரபத்மனுக்கு அறிவுரை கூறுவதற்காக முருகன் வீரபாகுத்தேவரை அனுப்பினான். வீரபாகுவின் அறிவுரை கேட்காத சூரபத்மன் போர் அறிவித்தான். முருகபெருமானுக்கும், சூரபத்மனுக்கும் இடையே போர் நடைபெற்றது. இறுதியில் கடலிலே மாமரமாக நின்றிருந்த சூரபத்மனின் மீது தனது வேலால் இரண்டாக பிளந்து கருனையால் ஆட்கொண்டு தேவர்களை மீட்டு அவர்களின் பூஜையை ஏற்றுக்கொண்ட தலம் இத்தலம் தான். முருகன் சூரபத்மனோடு போரிட்டு தேவர்களை மீட்ட காரணத்தினால் இதற்கு 'ஜெயந்திபுரம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு.
 ஆதிசங்கரர் 'சன்மத ஸ்தாபனம்' செய்து கொண்டு வரும்பொழுது அவருக்கு காசநோய் ஏற்பட்டபோது சிவபெருமான் அவருள் தோன்றி திருச்செந்தூரில் உள்ள முருகனை வழிபட்டால் உனக்கு இந்நோய் குணமடையும் என்று கூறினார். பின்பு ஆதிசங்கரர் அதிகாலையில் திருச்செந்தூருக்ச் சென்று வழிபடும்போது ஆதிசேஷன் தன் புஜங்களை அசைத்துக்கொண்டே வந்து முருகனை வழிபட்ட ஓர் அரிய காட்சியை கண்டவுடன் ஒரு 'சுப்ரமணிய புஜங்கம்' என்ற பாடலை பாடுகிறார். அப்பாடலை பாடி முடித்தவுடன் அவர் குணமாகிறார். எனவே பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து சுப்பிரமணிய புஜங்கம் பாடினால் அவர்கள் நோய் குணமாகும் என்பது ஐதீகம்.                                                                                                                                              சீவை வைகுண்டத்தில் வடபதியில் உள்ள சண்முகக் கவிராயருக்கும், சிவகாமசுந்தரிக்கும் தவப் புதல்வராகப் பிறந்த குமரகுருபரர் ஐந்து வயது வரையில் ஊமையாக இருந்தார். பெற்றோர் எவ்வளவோ முயன்றும் பயனளிக்காமல் போக இறுதியில் அவர்கள் குழந்தையை இத்தலத்திற்கு கொண்டு வந்து சண்முகவிலாச மண்டபத்தில் கிடத்தி தவமிருந்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி முருகன் ஒருநாள் இரவில் தோன்றி ஊமைக்குழந்தையின் நாவில் வேலால் எழுதி குருபரா எனவிளித்துக் காட்சி தந்து மறைந்தார். முருகரின் காட்சியைக் கண்ட குருபரர். முருகா! முருகா! என்ற குரலோடு எழுந்தார். அன்றுமுதல் பேசியதோடு நில்லாமல் முருகன் மீது கவிபாடினார். அவர் பாடிய கவிகளே சைவ சித்தாந்தத்தின் சாரம் எனப் போற்றப் பெறுகின்ற கந்தர் கலி வெண்பா என்னும் அற்புத நூலாகும்.                                                                                                                                                                                                                                                       

கோயில் அமைப்பு : இக்கோயில் கடற்கரையில் உள்ள மணல் மேட்டில் மூன்று பிரகாரங்களுடன், அழகிய ராஜகோபுரத்துடன் அமைந்த பெரிய கோவிலாகும். இக்கோயில்  கடலலைகள் இடையுறாது வந்து தழுவுமாறு அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறை ஆதியில் சந்தனசைலம் என வழங்கப்பட்ட கல்லும் மணலும் கலந்த குன்றைக் குடைந்து கட்டப்பட்டதாகவும், பின்னர் பாண்டிய மன்னர்களாலும், சேர மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

 இத்தலத்து ஊரிலிருந்து கடற்கரைக் கோவிலுக்குச் செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோயில் உள்ளது. இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலன் இருக்கும் இடத்தை அன்பர்க்குத் தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகிறார். இவரை வணங்கியே கடற்கரைக் கோயிலுக்குச் செல்லுதல் வேண்டும் என்பது முறையாகும். கடற்கரையில் அநைதுள்ள இத்தலம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் மேற்குதிசையில் மட்டும் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இந்த ராஜகோபுரம் கட்டத்தொடங்கிய காலத்தில் முருகபெருமானே மனித உருவில் வந்து வேலையாட்களுக்கு திருநீற்றுப் பிரசாதத்தை கூலியாக கொடுத்து அதனை தூண்டுகை விநாயகர் கோயிலைக் கடந்த பின்னர் திறந்து பார்க்க வேண்டும் என்று கூறி மறைந்ததாகவும், அவ்வேலையாட்கள் அவ்வாறு பார்த்தபோது திருநீறு கூலிப்பணமாக மாறியிருந்ததாகவும் கூறப்படுகிறது.                                                                                                                                                                                                                                                               திருக்கோயிலின் மூன்றாவது வெளிப்பிரகாரம் கோயிலை சுற்றிக் கடற்கரை ஓரமாகச் செல்கின்றது. இப்பிரகாரத்தின் வடபாகத்தில் சிறிது தொலைவில் கல்லும், மணலும் கலந்த குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட வள்ளிநாயகி கோயில் உள்ளது. இக்குகைக் கோயில் அர்த்த சித்திர வடிவில் வள்ளிநாயகி காட்சியளிக்கின்றாள். இக்குகைக் கோயிலின் மேற்குப் பகுதியில் சோலையின் நடுவே முருகப்பெருமான் எழுந்தருளும் காற்று வாரிதி மண்டபம் அமைந்துள்ளது. மூன்றாம் பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் வசந்த மண்டபமும், தெற்குப் பகுதியில் சண்முக விலாச மண்டபமும் அமைந்துள்ளது. சண்முக விலாச மண்டபத்தின் முகப்பில் ஆறு படைவீடுகளைக் குறிக்கும் அழகிய சிற்பங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இம்மண்டபத்தின் அருகில் கடற்கரை தீர்த்தமாகிய 'நாழி கிணறு' அமைந்துள்ளது. இதனை 'வதனாரம்ப தீர்த்தம்' என்றும் வழங்குவர். இத்தீர்த்தம் மிகவும் விசேஷமானது. சண்முக விலாச மண்டபத்திலிருந்து படிக்கட்டுகள் நிலமட்டத்திற்குக் கீழே சென்று நாழி கிணறு தீர்த்தத்தில் குளிக்கலாம். இதில் ஒரு குவளை நீர் மட்டுமே எடுக்க முடியும். இது ஒரு வற்றாத ஊற்றாகும். கடற்கரை அருகில் இருந்தாலும் இத்தீர்த்தம் சுவைமிகுந்து காணப்படுகிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                 

இங்கு மூலவர் சன்னதிக்கு பின்னுள்ள குகையில் பஞ்சலிங்கம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

 இரண்டாவது பிரகாரத்தின் தூண்களில் கண்டு வியக்கத்தக்க வேலைப்பாடுகள் வாய்ந்த பல சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கு தென்பகுதியிலிருந்து முதல் பிரகாரத்திற்குச் செல்லும் வாயிலை வீரகேசரியும், வீரமார்த்தாண்டரும் காவல் செய்து நிற்கின்றனர்.

முதல் பிரகாரத்தில் நுழைந்தவுடன் முதலில் தெற்கில் காணப்படும் கோயிலில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி, தெய்வயானையுடன் காட்சியளிக்கின்றார். இப்பிரகாரத்தின் தென்மேற்குப்பகுதியில் வள்ளி நாயகிக்கும் வடமேற்குப் பகுதியில் தெய்வயானைக்கும் பளிங்குக் கற்களால் அமைந்த தனித்தனிக் கோயில்கள் உள்ளன.

இப்பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர், விசாலாட்சி முதலியோர்க்கும் வடக்குப் பகுதியில் மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார் முதலியோர்க்கும் திருச்சந்நிதிகள் அமைந்துள்ளன.

கருவறையில் மூலவராகிய ஆறுமுகநாதர் வள்ளி தெய்வயானையுடன் காட்சி தந்தருள்கிறார். மூலவர் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இம்மூலவரின் திருவுருவம் காண்பவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து மெய்மறக்கச் செய்யும் பொலிவுடையது. இக்கோயிலில் ஆவணி ஐப்பசி, மாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவையும் முக்கியமானவையாகும். ஆவணித் திருவிழாவின் ஏழாம் நாள் விழா மிகவும் விஷேசமாக நடைபெறுகிறது


விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : திருச்செந்தூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​