Top >>Temples >>சிவாலய ஓட்டம் - 12
3:30:05 PM         Monday, August 25, 2014 
07. கல்குளம்

07. கல்குளம்

கல்குளம் நீலகண்டசுவாமித் திருக்கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிருந்து 16 கி.மீ மேற்கே உள்ள ஊர் தக்கலை. இங்கிருந்து வடக்கே 1கி.மீ சென்றால் பத்மநாபபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த பத்மநாபபுரமே பண்டைய காலத்தில் கல்குளம் என்று அழைக்கப்படுகிறது

மூலவர் நீலகண்டேசுவரர்

பத்மநாபபுரம் அரண்மனை (கல்குளம்) : இத்தலம் 12 சிவாலயங்களில் ஏழாவது சிவாலயம் ஆகும். சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது கல்குளம. கோட்டையும் இன்றும் அழியாமல் நல்லமுறையில் பாதுகாத்து வரப்படுகிறது. இக்கோட்டை 186 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வீரமார்த்தாண்டவர்மா மகாராஜாவின் காலம் வரை இது கல்குளம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மார்த்தாண்டவர்மா மகாராஜா பதவியேற்றதும் இவ்வரண்மனையில் தான். வேணாட்டின் தலைநகராக கல்குளம் விளங்கியது. மார்த்தாண்டவர்மாவின் முயற்சியால் இந்நாடு விரிவாக்கப்பட்டு திருவிதாங்கூர் இராஜ்யம் எனப் பெயரிட்டு கி.பி. 1744 இல் திருவனந்தபுரத்திலிருக்கும் பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்துத் தலைநகரத்தையும் திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். அதன் நினைவாக பத்மநாபபுரம் என்று கல்குளத்திற்கு பெயரிட்டதாகத் தெரிகிறது. 30 அடி உயரத்தில் கோட்டை மதில்கள் உள்ளன. 4 பெரிய கற்சுவர்களால் ஆன கோவில் ஆகும். 4 பெரிய வாசல்களும், 5 சிறிய வாசல்களும் உள்ளன.

திருத்தல அமைப்பு : இந்த கல்குள கோட்டையினுள் தான் நீலகண்டசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது மிகப்பெரிய கற்சுவரால் ஆனது. இங்குள்ள இறைவன் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார். கோயில் கிழக்குதிசை நோக்கியுள்ளது. குமரி மாவட்டத்தின் பன்னிரு சிவாலயங்களில் கோபுரத்துடன் காட்சியளிப்பது இத்தலம் ஒன்றே ஆகும். இங்குள்ள ஆதிமூல மூர்த்தியாக ஆதிமூலலிங்கம் ஒன்று உள்ளது. இது 10 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  கோயிலில் இடப்பக்கம் உள்ள பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது இங்கு ஆனந்தவல்லி அம்மன் சன்னதி ஒன்று உள்ளது மீனாட்சி அம்மன் போன்ற சிலையே இங்கு காணப்படுகிறது. மீனாட்சி அம்மனின் கையில் கிளி இருக்கும். ஆனால் இங்கு ஆனந்தவல்லி அம்மன் கையில் புச்செண்டு உள்ளது கோயிலின் வெளிபிரகாரத்தில் சாஸ்தா கோவில் உள்ளது. இடதுபுறம் கர்ணன், சிவன், விஷ்ணு, பரசுராமன், ஸ்ரீராமன், அர்ச்சுனர் ஆகியோர் சிலைகள் காணப்படுகின்றன.

விழாச்சிறப்பு : ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளன. சித்திரை மாதம் பெளர்ணமி விழாவும், ஆடிச் செவ்வாய் அம்மனுக்கு விழாவும் நடைபெறுகிறது. ஆடிச்செவ்வாய் பெண்கள் அதிகமாக வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். ஆவணி மாதம் திருவோண விழாவும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவும் நடைபெற்று வருகின்றன. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை விழாவும், மார்கழி மாதம் திருவாதிரை விழாவும், தை மாதம் திருக்கல்யாணமும், மாசி மாதம் சிவராத்திரி விழாவும், பங்குனி மாதம் பங்குனித்திருவிழாவும் ஆராட்டும் நடைபெறுகிறது.

 மன்னர்களால் கட்டப்பட்டு சிறந்த முறையில் அமைக்கப்பட்ட இக்கோவில் மன்னர்களால் மானியம் வழங்கப்பட்டு எல்லா விழாக்களும் நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : நாகர்கோயில்

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​