Top >>Temples >>சிவாலய ஓட்டம் - 12
3:30:05 PM         Monday, August 25, 2014 
03. திற்பரப்பு

03. திற்பரப்பு

திற்பரப்பு மகாதேவர் ஆலயம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறையின் வடகிழக்கில் சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். திக்குறிச்சியிலிருந்து கிழக்கு நோக்கி 14 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது

மூலவர் : திற்பரப்பு மகாதேவர்

திருத்தல அமைப்பு : இது பன்னிரு சிவாலயங்களில் மூன்றாவது கோயிலாகும். இத்தலம் உயர்ந்த மலைகளும், அடர்த்தியான சோலைகளும், காட்டிடையே பரந்து, விரிந்து, வளைந்து, தெளிந்து ஓடும் கோதையாறும், பொங்கு புனல் அருவியும் சூழ்ந்த இயற்கை எழில் சூழலில் மகாதேவர் அமைதியாக குடிகொண்டுள்ளார். கி.பி 9 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே சைவ சமயத்தவரின் புண்ணிய இடமாக கருதப்பட்டு வந்துள்ளது. இக்கோயில் வட்ட வடிவில் அமைந்துள்ளது. இக்கோயில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சேரநாட்டுக் கோயில்களில் பெரும்பாலான கோயில்கள் வட்டவடிவில் அமைக்கப்பட்டு கூரையின் மேற்பகுதி செம்புத்தகடுகள் வேயப்பட்டிருக்கும். அம்முறையில்தான் இக்கோயிலும் அமைந்துள்ளது. மூலவர் மேற்கு திசைநோக்கி அமர்ந்துள்ளார். இங்கு சிவன் வீரபத்திரராக காட்சி தருகிறார். தட்சனை வதம் செய்த சிவன், இவ்விடத்தில் ஓய்வெடுக்கும் போது கோபக்கனல் பொங்கிய முகத்தை பார்க்க முடியாத நந்தி இங்கு வடக்கு முகம் பார்த்து அமைந்துள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் அம்பாடி கிருஷ்ணன், முருகன் ஆகியோர் தெய்வ திருவுருவங்கள் உள்ளன. முகப்பு மண்டபத்தின் இருபக்கமும் அம்பாள் சன்னதியும், விநாயகர் சன்னதியும் கிழக்கு நோக்கியுள்ளன. முன்புற மண்டபத்தில் கூரையும் செம்புத் தகடுகள் வேயப்பட்டிருக்கின்றன. உட்புறம் சிற்ப வேலைகள் மிக்க மரத்தால் வேயப்பட்டிருக்கின்றது. இக்கோயிலின் முகப்பிலும், வெளிக்கோயிலின் முகப்பிலும் துவாரகபாலகர் சிலைகள் உள்ளன.  இக்கோயிலில் மகாதேவருக்குத் தங்கத்திலான விக்கிரகம் இருந்ததாகவும் முகமதியர்கள் படையெடுத்தபோது அவர்களுக்கு அஞ்சிய மக்கள் தங்க விக்கிரகத்தை எடுத்துச் சென்று திருவட்டாறு கோயில் கருவறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

திருத்தல வரலாறு : சிவபெருமான் தன்னை மதிக்காக தக்கனைத் தண்டிக்க வீரபத்திரராகவும், தேவியார் பத்திரகாளியாகவும் உருவெடுத்து தக்கனின் யாக குண்டத்தை அழித்தனர். உக்கிர வடிவு கொண்ட சிவபெருமான் தவம் செய்யப் பசுமைமிகு சோலையும், வளம்பெருக்கும் நதிக்கரையுமாகிய இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து இங்கு வந்து தவம் மேற்கொண்டதாக ஒரு கதை கூறப்படுகிறது. அவ்வாறு சிவனும், பார்வதியும் தவம் புரிந்த இடத்தில் மக்கள் ஆலயம் எழுப்பி வழிபட்டனர். அருவிக்குப் பக்கத்தில் ஒரு குகையில் பத்திரகாளி கோயில் உள்ளது. இக்கோயிலிலிருந்து முதல் பிரகாரத்திற்கு வருவதற்கு ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் இக்கோயிலின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் அடிக்கடி இங்கு வந்து வழிபட்டதாகவும் தெரிகிறது

திற்பரப்பு அருவி : கோவிலின் பின்புறம் அருவி அமைந்துள்ளது. இந்த அருவி மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது கோயிலின் பின்னால் மலையடிவாரத்தில் பரந்து விரிந்து ஆறு கோயில் வலப்புறம் சுருங்கி மேலிருந்து கீழே அருவியாக பாய்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைகளும், இயற்கை சூழலும் பின்னிப்பிணைந்து அதனோடு நீரருவி பாயும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி மகாதேவரை வழிபட்டுச் செல்கின்றனர்.

விமானதளம் : திருவனந்தபுரம்

ரயில் நிலையம் : குழித்துறை

பஸ்வசதி : உண்டு

இடவசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​