Top >>Temples >>நவகிரக திருத்தலங்கள் - 9
3:30:05 PM         Monday, August 25, 2014 
திருநாகேஸ்வரம் - இராகு

ராகு

                                                                                                  01 திருநாகேஸ்வரம் - இராகு                                                                                                                                                                                                        திருநாகேஸ்வரம்                                                                                                                                                                                                         

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவிடைமருதூருக்கு தென்மேற்கே 4 கி.மீ தொலைவில் உள்ளது.

சுவாமி : நாகேசுவரர்,  நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்

அம்பிகை : பிறையணிநுதலாள்,  கிரிகுஜாம்பிகை

தலமரம் : சென்பகம்

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், முதலிய 12 தீர்த்தங்கள்          

பதிகம் : திருநாவுக்கரசர் - 3,   திருஞானசம்பந்தர் - 2,   சுந்தரர் - 1                                                                                                                                                                                                                                                  

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் சண்பகவனம், கிரிகன்னிகை வனம் எனவும் பெயர் பெறும். இத்திருத்தலம் ராகு கிரகத்திற்கு உரிய தலம். சேக்கிழார் சுவாமிகள் திருப்பணி செய்த தலம். மேலும் சூரியன், சந்திரன், ஆதிசேஷன், தட்சன், கார்க்கோடகன் முதலிய நாகராஜாக்கள், கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன் முதலியோர் வழிபட்டது. மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.

இத்திருவூரின் மேல் தொண்டர்சீர் பரவுவார் ஆகிய சேக்கிழாரடிகள் பெரும் அன்புடையார். அதன் அடையாளமாக தன் ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சரம் எனத் திருக்கோயில் எழுப்பியுள்ளார். இத்தலத்தில் சேக்கிழார் சிலையும் உள்ளது சங்கநிதி பதுமநிதி, மாசாத்தா இவர்கள் திருவுருவங்களும் இங்கு உள்ளன. சுந்தரர் அருகே பரவை நாச்சிர் சிலைகளும் உள்ளன.

ராகு பகவான் சிவபெருமானைப் பூஜித்த தலமாதலால் நாகேஸ்வரம் என்று பெயர் வந்தது. காலையில் குடந்தைக் கீழக்கோட்டம், பகலில் திருநாகேஸ்வரம், மாலையில் திருப்பாம்புரம் ஆகியவற்றை வணங்குதல் சிறப்பு எனக் கருதப்படுகிறது. இத்தலபுராணத்தில் பெருமானுக்கு இருவடிவங்களும், அம்மைக்கு இருவடிவங்களும் சொல்லப்படுகின்றன. அவை சண்பகமரத்தடியில் மறைந்த நாகநாதர் சந்நிதியும், அர்த்தநாரீசர் சந்நிதியும், உமை சந்நிதியும், கிரிகுஜாம்பிகை சந்நிதியும் ஆகும். பிரகாரத்தில் விநாயகர், முருகர், நடராஜர், சேக்கிழார், ராகு, கலைமகள், திருமகள் முதலிய சந்நிதிகள் உள்ளன.                                                                                                                                                                                                                                                                                                          

நாக அரசராகிய ராகு பகவான் சிவபெருமானை பூசித்த திருத்தலமாகும். வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீஇராகுபகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். மேலும் இராகு பகவான் ஸ்ரீநாகநாதசுவாமியை வழிபட்டதோடு அல்லாமல் தன்னையும் வழிபடுவோர்க்கு பல நலன்களை அருளும் வரமும் பெற்றுத் திகழ்கின்றார்.

 பொதுவாக இராகு-கேது கிரஹங்கள் எப்படி ஏற்பட்டன என்பதைப் பண்டைய புராணங்கள் எடுத்தியம்புகின்றன. ஜோதிடமுறையில் பார்க்கும் போது இராகு பகவானின் பெருமை அளிவிடற்கரியதாகும். பூமியானது சிறிது நீண்ட வட்டகதியில் சூரியனைச் சுற்றிவருகிறது. அதே போன்று சந்திரனும் பூமியை இரு இடங்களில் சந்திக்கின்றது. சந்திரன் மேல்நோக்கிச் செல்லும் போது பூமியின் கதியில் குறுக்கிடும்  இடம் இராகு எனவும், சந்திரன் கீழ்நோக்கி கேது எனவும் பெயர் பெறும்.

 நவகிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும், புதனைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட இராகுவும், கேதுவும் பலம்பொருந்தி விளங்குகின்றனர். சோதிட முறையில் இதனை நைசர்க்க பலம் என்று கூறுவர். சந்திர சூரியனையுயும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி குறையும்படியாகவும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இராகு-கேதுவுக்கு உண்டு.

திருநாகேஸ்வரத்தில் மட்டுமே இராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இருதேவியருடன் தனிக்கோயில் கொண்டு மங்கள இராகுவாக அருள்பாலிக்கிறார்.

 ஐந்தலை அரவு எனும் இராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறுவது இவரது தனிச்சிறப்பாகும். மேலும் 16.02.88 அன்று இராகுவின் திருமேனியில் 5 அடி நீளமுடைய பாம்பு தனது சட்டையினை உரித்து மாலையாக அணிவித்து இருந்த காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டதோடு அதன் மூலம் அரவு வடிவில் விளங்கி அன்பர்களுக்கு அனுக்ரகம் புரிந்து வருகிறார் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. இந்நிகழ்ச்சியை அடுத்து அப்பாம்புச் சட்டையை பெரிய கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தர்கள் வழிபடுவதற்கு ஏதுவாகத் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது

கோயில் அமைப்பு : கிழக்கு நோக்கியமைந்த இத்திருக்கோயில் நாற்கோபுரங்களும், மூன்று பிரகாரங்களும், மடவளாகமும், தேரோடும் நான்கு வீதிகளும் கொண்டு விளங்குகிறது.  ஐந்து கண்களையுடைய கீழ்கோபுர வாசலின் வழியே உள்நுழைந்தவுடன் முன்னே நிருத்தகணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடப்பால் சூரிய புஷ்கரணியும், வலப்பால் நூற்றுக்கால் மண்டபமும் உண்டு. புஷ்ரணியருகில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதியை வணங்கிக் கொண்டு, உட்கோபுர வாயிலை அடைந்து அங்குள்ள மதிற்சுவர்களை ஒட்டிச் சுற்றிலும் சென்றால் அலங்கார மண்டபத்தை அடைகிறோம். அங்கே வாகனங்களும் காட்சி தருகின்றன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

மூலவர் அமைந்த கருவறையை அடுத்த முதல் பிரகாரத்தில் மேல்புற விநாயகர், சந்திரசேகரர், முருகன், பஞ்சலிங்கம், இலக்குமி முதலிய சந்நிதிகள் உள்ளன. வடபுறத்தில் அறுபான்மும்மை நாயன்மார்கள். நடராஜப்பெருமான் சந்நிதிகளும், பள்ளியறையும் உள்ளன. தென்பால் சேக்கிழார், பாலறாவாயர், அவர் தாயார், நால்வர் சந்நிதிகளும் உள்ளன. சேக்கிழார் சந்நிதிக்கு வடபால் அமைந்த அதிகார நந்தி சிலாவிக்கிரகம் காண அரியதொன்று.

இத்தலத்தில் மற்றொரு அம்மனாகிய கிரிகுஜாம்பிகை (குன்றுமா முலையம்மை) சந்நிதி மிகவும் சிறப்பு மிக்கது. இவ்வம்பிகை சந்நிதி தனிக்கோயிலாக காணப்பெறுகின்றது. இச்சந்நிதியின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் சமண முனிவர்கள் சிலைகள் உள்ளன. இத்தலம் ஒரு காலத்தில் சமணர் செல்வாக்கு பெற்றிருப்பதை இவை நினைவூட்டுவதாக உள்ளது. ஊரின் கிழக்கேயுள்ள சன்னாபுரமும் இதனை வலியுறுத்துகின்றது. கிரிகுஜாம்பிகை தவக்கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். பக்கத்தில் கலைமகளும், திருமகளும் விளங்குகின்றனர். தேவியின் வடிவம் சிலாவிக்கிரகம் இல்லாமையின் அபிஷேகம் கிடையாது. தை, ஆடி மாதங்களில் -புனுகுத்தைலம் சாத்தப்பெறுகின்றது.

 இத்தலத்து விநாயகர் சண்பக விநாயகர் என்றும், சான்று விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் கட்டளைப்படி முதலில் தன்னை பூசித்து வழிபட்டுச் சான்றாக விளங்கியதால் சான்று விநாயகர் என்றழைக்கப்படுகிறார். மூலவருக்கு நாகநாதர், நாகேச்சரர் எனும் பெயர்கள் உள்ளன.  கல்வெட்டுகளில் சுவாமிக்கு சண்பகாரண்யேசுவரர், திருநாகேஸ்வரம் உடையார். மகாதேவர் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.


அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

                                                                                                       

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​