Top >>Temples >>நவகிரக திருத்தலங்கள் - 9
3:30:05 PM         Monday, August 25, 2014 
குச்சனூர்

02. குச்சனூர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியிலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்திற்கு தேனியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவன் :  சனிபகவான்

தீர்த்தம் : சுருளி நதி, சுரபிநதி

தலமரம் : விடந்தை மரம்

திருத்தல விபரம் : தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுரபி நதி என்று புராணங்களில் கூறப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்காலின் மேற்கு கரையில் இந்த குச்சனூர் சனீஸ்வர பகவான் சந்நிதி அமைந்துள்ளது. சனி தோஷம் உடையவர்கள் இத்தலத்திற்கு வந்து இறைவனை மனம் உருக வேண்டிக் கொண்டால் அவர்களது வாழ்வில் வரும் சோதனைகள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும். மேலும் தாங்கள் துவங்கும் தொழில்கள் வளர்ச்சி அடையவும், வணிகங்கள் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர்.

திருத்தல வரலாறு : இப்பகுதியை சேர்ந்த தினகரன் என்னும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வருந்தி வந்த நிலையில் தனக்கு ஒரு குழந்தை அளிக்கக் கோரி இறைவனிடம் வேண்டி வந்தார். இவ்வாறு ஒருநாள் வேண்டிக்கொண்டிருக்கும் போது அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். அதன் பின் அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அக்குழந்தைக்கு சதாகன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தார். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்ற எண்ணத்துடன், சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடி சூட்டினார்.

 இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. சனி தோஷத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளானார். தன்னை வளர்த்து மன்னனாக்கிய தந்தை படும் துன்பத்தை கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனி பகவான் உருவத்தை படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினார்.

 சந்திரவதனனின் வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவர் முன் தோன்றி உனது தந்தை முற்பிறவியில் செய்த பாவங்களுக்கேற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. அவர்களுடைய பாவ வினைகளுக்கு ஏற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்கு பல துன்பங்கள் வருகின்றன. இந்த காலங்களில் வரும் துன்பத்திலும் தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உன் தந்தையின் முற்பிறப்பின் பாவவினைகளுக்கேற்ப அவருக்கு துன்பம் வருகின்றன என்று கூறினார்.

 சந்திரவதனன் அனாதையாக வந்த தன்னை வளர்த்து, வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் முடிசூட்டிய அவருக்குக் கொடுக்கும் துன்பங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தை குறைக்கும்படி வேண்டினார். அவருடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவருடைய தந்தைக்கு பதிலாக உனக்கு ஏழரை நாழிகை காலம் சனி தோஷம் பிடிக்கும் என்றும், அந்த காலத்தில் உனக்கு பல துன்பங்கள் வரும் என்றும், அந்த துன்பங்களை எல்லாம் நீ அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தார்.

 சனீஸ்வரரும், சந்திரவதனனுக்கு ஏழரை நாழிகை காலத்தில் பல துன்பங்களை கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனன் முன் மீண்டும் தோன்றிய சனி பகவான், இந்த ஏழரை நாழிகை கால சனிதோஷம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோஷத்தால் வரும் துன்பங்களை குறைத்து, முடிவில் நன்மைகளை அளிப்பேன் என்று கூறி மறைந்தார். பின்பு அவ்விடத்தில் சுயம்புவாக தோன்றினார்.

திருத்தலச் சிறப்பு : இத்தலத்தில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா என்கிற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் சனிப்பெயர்ச்சி திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது லட்சகணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலிருந்து வந்து தங்கள் குறைகளை தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.

 இத்தலத்திற்கு விடந்தை மரம் தலமரமாகவும், கருங்குவளை மலர் தல மலராகவும், வன்னி இலை தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், எள் தாணியமாகவும் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு ஏற்றி வழிபடுவதுடன், காகத்திற்கு அன்னமிட்டு வழிபடுகின்றனர்.

 அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டே இருப்பதால் மஞ்சனக் காப்பு கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இத்தலம் சனீஸ்வர பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் எனவும் கூறப்படுகிறது.

மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இத்தலத்திலுள்ள சுயம்பு மூலவருக்குள் ஐக்கியமாகி உள்ளதால் சனீஸ்வர பகவானுக்கு 6 கண்கள் உள்ளன.

இக்கோயிலில் துணைத் தெய்வங்களான அருள்மிகு சோனை கருப்பண சுவாமி அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.


அருகிலுள்ள விமானதளம் : மதுரை

ரயில் நிலையம்   : தேனி

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​