Top >>Temples >>நவகிரக திருத்தலங்கள் - 9
3:30:05 PM         Monday, August 25, 2014 
திருஇரும்பூளை - ஆலங்குடி - குரு

161. திருஇரும்பூளை - ஆலங்குடி - குரு

                                                                                                                

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது ஆலங்குடி என்று வழங்கப்படுகிறது. கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சுவாமி : ஆப்தசகாயேசுவரர்,  காசிஆரண்யேசுவரர்

அம்பிகை : ஏலவார் குழலி

தலமரம் : பூளைச்செடி

தீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி,  பிரம்ம தீர்த்தம், ஞான கூபம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1                                                                                                                                                                                                                                                                                                                                                                

திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் நவகிரகத்தலங்களில் குருஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி தனிச் சிறப்புடையது. கோயில் சிற்பங்கள் அதிகம் உள்ள தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். குரு பரிகாரத் தலமாக விளங்கும் இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விஷேசமாக கருதப்படுகிறது. பூளைச்செடியை தலமரமாக கொண்டதால் திருஇரும்பூளை என பெயர் பெற்றது.

தல வரலாறு : இக்கோவில் திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகுந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டார். அமைச்சர் மறுக்க அவரது தலையை வெட்டிவிடும்படி முசுகுந்தன் கூறினார். கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சப்தம் தலம் முழுவதும் ஒலித்தது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்றார் என்பது புராண வரலாறு. மற்றுமொரு புராண செய்தியின்படி பாற்கடலைக் கடையும் போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் உண்டதலம் இதுவாகும். இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால் இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் காசியாரண்ய தலத்தில் விளங்கும் சத்குருவாகிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும், உலகிற்கு ஏற்படும் ஆபத்தை நிவர்த்தி செய்ததால் உண்டாகிய ஆப்தசகாயர் என்னும் திருநாமத்துடன் விளங்குகின்ற ஏலவார்குழலி உடனுறையும், சிவபெருமானையும் தரிசிக்க எண்ணி மிக்க பக்தியுடன் காசியாரண்யம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, அகத்திய காவிரி (வெட்டாறு) வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அடியார்கள் கரையில் மணங்கலங்கி நிற்க காசியாரண்யேசுவரர் ஓடக்காரனாக வந்து முதலில் அடியார்களை இக்கரையில் சேர்த்து, மீண்டும் சுந்தரரை இக்கரையில் சேர்க்க சன்மானம் பெற்று அவரை ஏற்றி வரும் போது நடு ஆற்றில் சுழல் ஏற்படும்படி செய்து, பற்றுக்கோலை நழுவவிட்டு எடுப்பது போல பாசாங்கு செய்து தானும் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பது போல நிற்க, படகில் உள்ள நாயனார் இறைவனை வேண்ட, ஓடம் சிறிது தூரம் சென்று பாறையில் மோதி நொறுங்கியது. சிவபெருமான் ரிஷப ரூடராக தோன்றி யாவரையும் தூக்கி காப்பாற்றியதாக வரலாறு கூறிகிறது.

 பின் சுந்தரர் இத்தலத்திற்கு வந்து முறைப்படி வணங்கி வழிபட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானபதேசம் பெற்றார். இத்தலத்திலுள்ள குருமூர்த்தியை குருவாரத்தில் வணங்கி வழிபடுவோர்க்கு சிவஞானம் எளிதில் கைகூடும். மீண்டும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார் கூட்டத்துடன் அரவூர் காள்கோள்வரரை வழிபட்டு, நீடாமங்கலத்திலுள்ள சக்கரவாகபட்சியால் பூசிக்கப்பட்டு கோகமுகேசுவரரை வழிபட்டார்.

கோயில் அமைப்பு : நான்கு புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டுள்ளது. இக்கோபுரத்தில் 750 சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் உயரம் 80 அடி. ஊரின் மையப்பகுதியில் கோயில் அமைந்துள்ளது. தெற்கு கோபுரம் பெரியது. கிழக்கு கோபுரம் சிறியது. முப்புறமும் அகழி போன்ற திருக்குளம் சூழ்ந்துள்ளது. இத்தல விநாயகர் 'கலங்காமற் காத்த விநாயகர்' என்று பெயர் பெற்றவர். கோபுர வாயிலில் உள்ளார். ஆலகால விஷத்தால் கலங்கிய தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர். உள்ளே முதல் பிரகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. இதன் தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி மிக அழகாக உள்ளது. அடுத்து வரும் உள்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றை காணலாம். அடுத்துள்ள மகாமண்டபத்தை கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விசுவாமித்திரர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்து அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபடவேண்டும். இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்து கொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் கிட்டும்.

 ஸ்ரீகலங்காமற்காத்த விநாயகரை தரிசனம் செய்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். கிழக்கு நோக்கி இறைவன் ஆப்தசகாயேஸ்வரர் சந்நிதி உள்ளது. ஏலவார் குழலி அம்மன் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாக ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். வடக்கு திருமானப்பத்தியில் தெற்கு நோக்கி உத்ஸவ மூர்த்தி சனகாதி நால்வருடன் காட்சி அளிக்கிறார்.

 தெற்கு நோக்கிய ஏலவார்குழலி அம்மன் சந்நிதி தனிப்பிரகாசத்துடன் உள்ளது சனீஸ்வரர் சந்நிதியும், த்வஜ கணபதி, கொடிமரமும், நந்தி பீடமும், வடபுறம் வசந்த மண்டபமும், கீழ்ப்புறம் யாகசாலையும், தென்புறம் வடக்கு பார்த்து சப்தமாதா ஆலயமும் உள்ளது. தற்போது சப்தமாதா ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வடபுறம் நந்தவனம் உள்ளது.

இத்தலத்தில் குருவே தட்சிணாமூர்த்தியாகவும், தட்சிணாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விஷேசம். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். அம்பிகை தவம் புரிந்து திருமணம் புரிந்து கொண்ட தலம். இத்தலத்தில் கலங்காமல் காத்த விநாயகர், சூரியன், நால்வர், சோமேசர், குருமோசேசுவரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணுநாதர், பிரமீசர், காசி விசுவநாதர், விசாலாட்சியம்மை, அகத்தியர், ஆக்ஞா கணபதி, பெரிய வடிவம் உடைய விநாயகர், முருகர், சண்டேசுவரர், கல்யாண சாஸ்தா, சப்தமாதர்கள், நடராஜர், லிங்கோற்பவர், பிரம்மன், துர்க்கை, சுக்கிரவார அம்மன், சனீசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.

ஆலயச்சிறப்பு : அகண்ட சச்சிதானந்த ரூபியாய் அனந்த மூர்த்தியாகி எங்கும் நீக்கமற நிறைகின்ற எம்பெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு, ஆர்ச்சாவதார ரூபியாய் கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வருகின்ற இத்தலம் பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவள நாட்டிடையே மத்தியார்கள் தலம் என்னும் திருஇடைமருதூரின் பரிவார தலங்களில் தட்சிணாமூர்த்தி தலமாகவும், காசியாரண்யம் என்று முனிவர்களால் போற்றப்பெற்றதும் பஞ்சாரண்யதலங்களில் பூளைவனம் என்று புகழ் பெற்றதும், அமிர்த மதனம் செய்யும் காலத்தில் உண்டான ஆலகால விஷத்தை உண்டதால் ஆலங்குடி என பெயர் பெற்றதும் இத்தலத்தின் சிறப்புகள் ஆகும்.

 கருட பகவான் தன் தாயாரின் சாப விமோசனத்திற்காக அமிர்தம் கொண்டு வந்து தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்து தன் தாயாரின் விஷ தோஷத்தை போக்கினார். இதனால் இத்தலத்தில் விஷ உபாதையானது இதுவரை இல்லை என்பது கண்கூடு.

 ஸ்ரீ ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, குருமாலா மந்திரமாகிய 24 ஸ்தோத்திரங்களாக செய்வித்து, 64 கலைகளையும் பிரார்த்தித்து பெற்ற தலமாகும்.

அம்மை தழும்பு : திருவாரூரில் நடைபெறும் விழாவில் அப்போது அரசாண்ட ஈச சோழ மன்னன் எல்லாத்தலங்களுக்கும் சென்று சுந்தரமூர்த்தி திருவுருவங்களை கொண்டு வந்து விழா நடத்தினார். எல்லா சுந்தர மூர்த்திகளையும் விட ஆலங்குடி சுந்தரரில் உருவம் அவரது மனதைக் கவர்ந்தது. அதை திருவாரூரிலேயே வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதை அறிந்த ஆலங்குடி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் குழந்தைகள் அம்மை போட்டிருப்பது போல் தொட்டில் கட்டி ஆலங்குடி கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த அம்மைத் தழும்புகளை இன்றும் சுந்தரமூர்த்தி பெருமான் மீது காணலாம்.

வழிபட்டோர்கள் : ஆதிசங்கரர் குருமூர்த்தியை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன் முதலிய அஷ்டதிக்கு பாலகர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூசித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கப் பேறு பெற்றார்கள்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : நீடாமங்கலம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

 

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​