Top >>Temples >>முருகன் திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
030. மணவாளநல்லூர் - விருதாச்சலம் - தமிழ்நாடு

030. மணவாளநல்லூர் - விருதாச்சலம் - தமிழ்நாடு

மணவாளநல்லூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இருக்கிறது இத்தலம்.

சுவாமி : கொளஞ்சியப்பர்.

தீர்த்தம் : மணிமுத்தாறு

தலமரம் : கொளஞ்சி

திருத்தலச் சிறப்புகள் : இத்தலத்தில் மற்ற கோயில்களை போல் மதிய வேளையில் நடை சாத்தப்பட்டிருக்காது. காலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும் இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

திருத்தல வரலாறு : விருதாச்சலத்திற்கு வருகை தந்த சுந்தரர் சிவஅடியார்களுடன் சிவாலய தரிசனம் செய்து அந்ததந்த தல நாதனையும், தேவியையும் தமிழ் மணக்க, உள்ளம் உருகச் செய்யும் பாடல்களால் ஆராதித்த இவர் பழமலையை அடைந்தார்.

சுந்தரர் இது என்ன ஊர்? என்று தொண்டர் ஒருவரிடம் கேட்டார். இவ்வூர் பெயர் பழமலை என்னும் விருதாச்சலம். பரமனின் திருநாமம் பழமலைநாதர், அம்பிகை விருத்தாம்பிகை என்று பதில் கூறிய தொண்டரிடம் ஊரும் பழமலை, அம்பாளும் கிழவி, அரனோ தொண்டுக்கிழம் இவர்களை போற்றிப் பாடி ஆகப்போவது ஒன்றுமில்லை நடையை கட்டுவோம் என்று அலட்சியமாக கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தார் சுந்தரர்.

பிரபஞ்சத்திற்கே ஆதாரமான சிவபெருமான் மெல்ல சிரித்தார். அன்னையோ அடுத்து நடக்க போவதை அறிந்து கொள்ளும் ஆவலோடு ஈசனின் முகம் பார்த்து நின்றாள்.

பழமலைநாதர் தனது ஞானக்குழந்தையான முருகனிடம் சுந்தரருக்கு பாடம் புகட்டும்படி அருளாணை இட்டார்.

வேடனாய் வடிவெடுத்த வேலவன் சுந்தரர் கூட்டத்தை சுற்றி வளைத்தார். நாணேற்றி அம்பின் முனையில் நிறுத்தினார். அஞ்சி நின்ற சுந்தரர் வசமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துக்கொண்டார் முருகன். அவற்றைத் திரும்பத் தரும்படி கெஞ்சினார் சுந்தரர்.

வேலவன்  பழமலை வந்து பெற்றுக்கொள் என்று கம்பீரமாய் கட்டளை இட்ட போதுதான், தான் ஈசனை மதிக்காமல் வந்தது தவறு என்பதை உணர்ந்த சுந்தரர் உடனே பழமலை சென்று ஈசனை பாடி துதித்தார். உடனே இறையருள் பெற்றார். ஈசனின் ஆணைப்படி பழமலை பதியின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாய் அமர்ந்தார் வேலவன். அதிலொருவர்தான் மணவாளநல்லூரில் கோயில் கொண்டுள்ள கொளஞ்சியப்பர். இவர் இங்கு கோயில் கொண்ட கதையும் சுவாரஸ்யமானது.

இத்தலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்தது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து கொண்டு மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டியபடி அந்த பக்கம் செல்வார்கள். காலை சுமார் பத்து மணிக்கு செல்லும் அவர்கள் அந்தி சாய்வதற்குள் வீடு திரும்பி விடுவார்கள். அந்த அளவுக்கு மனித நடமாட்டம் குறைந்த காட்டுப்பகுதியாக விளங்கியது.

அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கவும், குறைகளை போக்கவும் திருவுளம் கொண்டார் குமரன்.

எல்லா மாடுகளும் பால் தருது. ஆனால் ஒரு வெள்ளைப் பசு மட்டும் நான்கைந்து நாட்களாக சொட்டு பால் கூட தர மாட்டேங்குதே என்று கவலையுடன் இருந்த பண்ணையார் ஒரு நாள் அப்பசுவை கண்காணித்தார்.

ஒருநாள் தோட்டத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது அந்த வெள்ளைப் பசு மட்டும் தனியாக ஒரு புதருக்குள் சென்றதை கவனித்த பண்ணையார் அதை பின் தொடர்ந்து சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி கண்டு அதிர்ந்து நின்றார்.

புதரின் அருகே சென்றதும், பசு சுற்றும் முற்றும் பார்த்து, தனது கண்களை மூடி நின்றது. அதன் காம்பிலிருந்து தானாக பால் பொழிந்து கொண்டிருந்தது. பசுவின் அருகில் சென்ற பண்ணையார் ஆதூரமாய் அதைத் தொட்டார். கண் திறந்த பசு, தன் பணி முடிவடைந்த நிலையில் அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தது. பால் பொழிந்த இடம் ஒரு கல் பீடமாக இருக்க கண்டார்.

ஊராரிடம் நடந்ததை சொல்லி கூட்டி வந்து காட்டினார். இவர் குமரக்கடவுள் என்று உணர்ந்த மக்கள் கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே தோன்றியதால் கொளஞ்சியப்பர் என்று திருநாமம் சூட்டி வழிபட்டார்கள்.

சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் கோயிலின் அழகிய ராஜகோபுரம் காண்பவர் கண்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது உள்ளே சென்றவுடன் பலிபீடம், கொடிமரம், மயில் ஆகியவற்றைக் கடந்து துவாரபாலகர்களின் அனுமதியோடு உள்ளே செல்லும் நாம் கருவறைகளைக் காண்கிறோம். ஒன்றில் சித்தி விநாயகர். அண்ணனின் அருகே அருவமாய், சுயம்புவாய் தோன்றிய கொளஞ்சியப்பர் வீற்றிருக்கிறார். விநாயகருக்கும், கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் மூன்றடி உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் 'பிராது கட்டுதல்' என்ற ஒரு வழிபாடு இருக்கிறது. கோயிலின் பிரகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.

பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை, பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

 இக்கோயிலில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பெண்ணெய் மருந்து தரும் வழக்கமும் இருக்கிறது

 இத்தனை பெருமைமிக்க இத்தலம் ஒரு 'சித்தர் பூமி' என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது பாம்பாட்டி சித்தரின் குருவாகிய அகப்பேய் சித்தர் இங்கு ஜீவ சமாதி கொண்ட 12 தலங்களுள் இத்தலமும் ஒன்று என கூறப்படுகிறது.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : விருதாச்சலம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​