Top >>Temples >>முருகன் திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
013. சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு

013. சிறுவாபுரி - சென்னை தமிழ்நாடு

                      

சிறுவாபுரி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு வடமேற்கே 33 கி.மீ தொலைவில் (கல்கத்தா செல்லும் சாலையில்) இடப்பக்கம் பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் நம்மை வரவேற்கிறது. இத்தோரணவாயிலிலிருந்து மேற்கே 3 கி.மீ தொலைவில் 'சின்னம்பேடு' என்று அழைக்கப்படும் 'சிறுவாபுரி' அமைந்துள்ளது.

மூலவர் : பாலசுப்பிரமணியர்

திருத்தலச் சிறப்புகள் : முருகம்மையார் கை தழைக்கச்செய்தது, தேவர்கள் இருந்து அமுதுண்டது., தேவேந்திரப்பட்டணம் கிடைக்கப்பெற்றது, இந்திரனுக்கு இந்திரபதி கிடைத்தது, இலவன்-குசன்-இராமனின் அசுவத்தைக் கட்டிய இடம், இராமனுடன் போரிட அதிகாரம் பெற்ற இடம், இராமனுடன் இலவன்-குசன் போரிட்டு சிறுவையை வென்று ஜெயநகராக்கியது, அர்ச்சனை திருப்புகழ் பாடப்பெற்றது, சிறப்புத் திருப்புகழ்கள் பாடப்பெற்ற தலமானது, ஒரே திருப்புகழ் மூலம் ஐந்து பலன்களைத் தரும் கோயில் என்ற பெருமை, மரகதப் பச்சைக் கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்த திருத்தலம். கலியுகத்தில் பேசும் கடவுளாகத் திகழும் சிறுவாபுரி முருகன் கோயில் அமைந்த பெருமை எனும் பன்னிரண்டு பெருமைகளை உடையது இத்தலம்.

 கிராமத்தின் நுழைவாயிலில் சப்தமாதர் கோயில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோயில் மேற்கே பெருமாள் கோயில் பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்க்கை கோயில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது. இவ்வூரில் ராமர் கோயில், விநாயகர் கோயில், ஜைனர் 22வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில் பல இருப்பதை அருணகிரிநாதர். ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பலவீதியுமே நிறைவான தென் சிறுவாபுரி எனத் திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயில் அமைப்பு : இத்தலத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது உயரமான கொடிமரம் கொடிமரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல் மரகதப் பச்சைமயில் கொலுவாக வீற்று இருக்கிறது. இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகிலும் வேறு எங்கும் இல்லை என் உறுதியாகக் கூறலாம்.

 கோயிலின் தென்மேற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியனார் ஔ வீசிக்கொண்டு இருக்க நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட கம்பீரமான ராஜகணபதி மரகதக் கல்லில் பச்சைப் பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாமத்துடன் வேண்டுவதை அளிக்க அழகுக் கோலத்துடன் வீற்றிருக்கிறார். பின் பிரகாரத்தில் சண்டிகேசுவரர், ஆதிமூலவர், நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் சூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார். இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும். சந்தமும் அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப் பெருமான் நம் சிந்தையைக் கவர்கிறார். கலியுகத்தின் பேசும் கடவுளான பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை நோக்கிப் பாய்ந்து வர சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அள்ளித்தர உடலும், உள்ளமும் லேசாகி மிதந்து வர நம்மை நாம் இழந்து அவன் திருவடிகளில் சரணாகிறோம். ஆகம சார சொரூபன், சேவல் மாமயில் பிரீதன், தேவ சேனாதிபதி, தன்தரள மணிமார்பன், தண்தமிழ்மிகு நேயன், சந்தமும் அடியார் சிந்தையில் குடிகொண்டவன், செம்பொன் எழில் சொரூபன், புண்டரிக விழியாளன், தேவேந்திரன் மகள் மணவாளனின் முன் வலது கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தி இருக்க முன் இடக்கரம் இடுப்பிலும் பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்மசாஸ்தா கோலத்தில் காட்சி அளிக்கிறார். பிரம்மனைத் தண்டித்து, பிரம்மனின் படைத்தல் தொழிலை ஏற்றுக்கொண்ட கோலம் உடைய முருகப் பெருமானை வணங்கினால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

 முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணியப் பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவை காணலாம்.

 முருகப் பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப் பச்சையில் கரும்பச்சை வைரம் போல பிரகாச ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.

 அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு மயிலுமாடி நீயுமாடி வரவேணும் என்று பாடியதற்கு இணையாக இங்கு மைந்துமயில் உடன் ஆடிவர வேணும் எனப் பாடியுள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள். அருணாசலேசுவரர், அபீதகுஜாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளிநங்கை தம் மணவாள பெருமான் முருகனைக் கைத்தலம் பற்றும் திருமணக் காட்சியாய் எழுந்தருளியிருக்கிறார். கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சல், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலம் காணவேண்டிய ஒன்றாகும். பின்புறத்திலிருந்து நோக்கும் போது, வள்ளி கள்ளத்தனமாக, அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார். மிக நேர்த்தியான வேலைபாடு. இதுபோன்று சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை சிலை வடிவாக இங்கு அமைத்து இருப்பது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. வள்ளி மணவாளப் பெருமானின் அழகைக்காண கண் கோடி வேண்டும்.

 இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக் கல்லில் செய்யப்பட்டவை. முருகன் சிலை கூட முன்பு மரகதப் பச்சைக் கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டது. கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கலாம். இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரகதப் பச்சைக் கல்லில் உள்ளது போல் வேறு எந்த கோவிலிலும் இல்லை. அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தை பாடியுள்ளார்.

திருத்தலபுராணம் : அசுவமேத யாகம் செய்ய விருப்பங்கொண்ட இராமபிரான், யாகப்பசுவாக அனுப்பப்படவேண்டிய குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வர அதை அங்கு வளர்ந்து வந்த இராமனின் பிள்ளைகளான லவனும், குசனும் கட்டிப்போட்டுவிட்டனர். இச்செய்தி அறிந்த ராமன் இலக்குமணனை அனுப்ப அவனால் முடியாமல் போகவே இராமனே நேரில் வந்து சிறுவர்களை எதிர்கொண்டு போரிட்டு வென்ற குதிரையை மீட்டுச் சென்றான் என்பது இராமாயணச் செய்தியாகும்.

 இவ்வாறு இராமனிடம், லவனும்-குசனும் சண்டை செய்த இடமே இச்சிறுவாபுரி என்பது வரலாறு ஆகும். இச்செய்தியை திருப்புகழில் உள்ள பாடல் வழியாக அறியப்படுகிறது.

ஊரின் பெயர் கூட காரணமாக அமைந்துள்ளது
சிறுவர் + போர் + புரிந்த = சிறுவாபுரி, சிறுவர்புரி

 இராமாயணத்தில் கூறப்பட்ட குசலபுரியே இன்றைய 'சிறுவாபுரி' ஆகும்.

முருகம்மையார் என்னும் முருக பக்தர் வாழ்ந்த இடம் இந்த சிறுவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் ஓயாது முருகா! முருகா! என  முருகனின் பெயரை எப்பொழுதும் உச்சரித்து வந்தார் முருகம்மையார். எப்பொழுதும் முருகனையே நினைத்து இருப்பதை பொறுக்கமுடியாத முருகம்மையாரின் கணவர், ஒருநாள் கடிதெனக் கோபம் கொண்டு முருகம்மையின் கையை வெட்டித் துண்டித்தார். உடனே முருகா என்ற பெயரை என்றும் மறவாத மாதவச் செல்வி முருகம்மையார் முருகா எனப் புலம்பி அழுது வேண்டிட உடனே சிறுவை முருகன் அம்மையார் முன் தோன்றி காட்சி தந்து துண்டித்த கையை முன்னிருந்தபடி சேர்த்து அருளினார் என்று சிறுவை நகர் குகன் பதிகத்தில் திருவாமாத்தூர் தவத்திரு முருகதாச சுவாமிகள் தனது பாடலில் சிறப்பித்து பாடி இருக்கிறார்.

 இத்துணை சிறப்புகள் வாய்ந்த சிறுவாபுரிக்கு வரும் அடியவர்கள் பலருக்கும் அவர்கள் வேண்டியபடி வீடு. வாகனம், தொழில், திருமணம் எனக் குடும்பம் சிறக்க கலியுகத்தில் உத்தரவு தந்து தானே உத்தரவாதமாகவும் இருந்து வரும் சிறுவைச் சிறுவன் சிங்காரவேலனை தரிசித்து புகழ்பெறலாம்.

விமானதளம்  : சென்னை

ரயில் நிலையம் : சென்னை

பஸ் வசதி : இல்லை

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​