Top >>Temples >>சக்தி தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
065 முண்டகக்கண்ணியம்மன் மைலாப்பூர் - சென்ன

065 முண்டகக்கண்ணியம்மன் மைலாப்பூர் - சென்ன

                                                          

                                                               

முண்டகக்கண்ணியம்மன் மைலாப்பூர்

 திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் உள்ள மைலாப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையிலிருந்து மயிலாப்பூர் குளம் பஸ் நிறுத்தத்திலிருந்தும், லஸ் முனையிலிருந்தும், கச்சேரி ரோடு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கலங்கரை விளக்கம் மூலமாக இத்திருக்கோயிலுக்கு எளிதாக வரலாம்.

 தாயார்    : முண்டகக்கண்ணியம்மன்

 
திருத்தல சிறப்புகள் : இங்குதான் உலகப்பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும், திரிசடை விரிகடவுளைத் தனியன்பினால் தொழுது, முக்திப்பேற்றை எய்திய வாயலார் நாயனாரும், திராவிட வேதம் என்று கூறப்படும் நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும் தோன்றினார்கள். இத்தகைய பழம் பெருமைகளை வாய்ந்த இத்தலத்தில் துயர் துடைக்கும் தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிக்கிறாள். இவ்வம்மைக்கு வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு முதல் பிரார்த்தனையைச் செலுத்துவது மக்களிடையே இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆண்டு முழுவதும் இக்கோயிலில் தினசரி பக்தர்களுக்கு உச்சிகால பூஜை அம்பாளுக்கு முடிந்ததும் 100 நபர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.


கோயில் அமைப்பு : இத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடபுறம் அருள்மிகு மாதவப்பெருமாள் கோயிலுக்கு மேற்கும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் தெரு என தொன்று தொட்டு இத்தலம் அழைக்கப்படும் தெருவில் அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அம்பாள் தோன்றியதுடன் சுயம்பான அருவுருவ தோற்றத்தின் மேல்பகுதி தாமரை மொட்டு வடிவிலும் சுயம்புவின் முகப்பு தோற்றத்தில் நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டும் மக்களுக்கு அருட்காட்சியளிக்கின்றாள். தாமரையின் மறுபெயரே முண்டகம் என்பதால் மக்கள் இந்த அம்மனை 'முண்டகக்கண்ணியம்மன்' என அழைக்கின்றனர். அம்மனின் பின்புறம் பெரிய புற்று இருந்தததில் இருந்து தினசரி நாகம் அம்பாளை வந்து வழிபட்டு சென்று வந்ததால் அம்பாளுக்கு ஓலைகூரை அமைக்கப்பட்டதாக வழிவழி செய்தியாக தெரியப்படுகிறது. வெப்பத்தை தான் தாங்கி குளிர்ச்சியை மக்களுக்கு அளிக்க ஓலை கூரையில் தாங்கி அருள்பாலிக்கின்றாள்.

நாகம் வழிபடுதல் : இத்தலத்து இறைவியின் பின்புறம் நாகப்புற்றும் குரு ஆலமரமும் உள்ளது. நாகம் இரவில் அம்மனை வழிபடுவதால் 'நாகதோஷம்' உள்ளவர்கள் புற்றுக்கு வழிபாடு செய்ததும் தனியாக உள்ள நாகர் சன்னதியில் வழிபட்டு நாகதோஷ நிவர்த்தியும் அடைகின்றனர்.

உற்சவர் சந்நிதி : அன்னை வீற்றிருந்து அருள்பாலிக்கும் கர்ப்பக்கிரகத்தையடுத்து வடபுறம் தனிக்கோயிலாக உற்சவர் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். இதன் வடபுறம் பிரம்மி, மகேசுவரி, வைணவி, வாராகி, கௌமாரி, சாமுண்டி ஆகிய சப்தகன்னயர்கள் ஒருங்கே வீற்றிருக்கும் சந்நிதியும், அதன் இருபுறமும் ஜமதக்னி முனிவர் மற்றும் பரசுராமர் சிலைகளும் உள்ளன.

உற்சவங்கள் : ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிப் பெருவிழா வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதத்தில் மூலவர் அம்பாளுக்கு 10 வாரமும், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் மிகச்சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. 1008 பூக்கூடைகள் 1008 மகளிர் சுமந்து வீதிவலம் வந்து ஆடி கடைவெள்ளியில் பூச்சொரிதல் உற்சவமும் தை கடைவெள்ளியில் 108 மகளிர் பங்கேற்று 108 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. ஆண்டில் ஐந்து முறை உற்சவர் திருவீதியுலா வெள்ளி சிம்மவாகனத்தில் வெளியே சென்று வருவது வழக்கமாக உள்ளது. (ஆடிபூரம் விஜயதசமி தைகடைவெள்ளி சித்ரா பெளர்ணமி வருடபிறப்பு)

தனிச்சிறப்பு : இங்கு எழுந்தருளியுள்ள அம்மனை வழிபடுபவர்கள் கண் ஒளிபெற்றும், நோயற்ற உடலும், அம்மை போன்ற நோய், பில்லிசூன்யம், பேய் பிடித்தல், நாகதோஷம், கிரக தோஷம் நிவர்த்தி, திருமணத்தடை கல்வியும் இதர பலனும் அடைகின்றனர். நோயற்ற உடலுக்கு அங்கபிரதட்சணம், வேப்பிலை பாவாடை அணிந்து வலம் வருதல், உடல் நோய்களுக்கு உண்டியலில் வெளளி பொன்னால் பதிக்கப்பட்ட உருவம், கை, கால், கண்மலர் பிரார்த்தனை செலுத்தியும், நாகதோஷம் உள்ளவர்கள் நாகம் வெள்ளியில் செய்து உண்டியலில் செலுத்தியும், மாங்கல்ய தோஷம் நிவர்த்திக்கு மாங்கல்ய பிரார்த்தனை உண்டியலில் செலுத்துவதும், இறைவியிடம் வேண்டிய வரம் கிடைத்தவுடன் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதும், சர்க்கரை பொங்கல் நேரடியாக பக்தர்களே கோயில் வளாகத்தில் வைத்து வழிபடுவதும் இக்கோயிலில் நடைபெறுவதால் இக்கோயில் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.


தங்கரதம் : முற்றிலும் பக்தர்கள் நன்கொடை மற்றும் உண்டியலில் வந்த காணிக்கையை கொண்டு ஒருகோடி மதிப்பில் தங்கரதம் புதிதாக செய்யப்பட்டு 03-06-07 அன்று முதன்முதலாக அம்பாள் தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தாள். பக்தர்கள் தங்கள் முக்கிய தினங்களுக்கு பிரார்த்னைக்கும், திருமண நாள், பிறந்த நாளுக்கு ரூ. 1000 தொகை கட்டி தங்கரதம் இழுத்து வருகின்றனர்.

 இத்ததிருக்கோயிலிலிருந்து வடபுறம் இதன் சார்புக் கோயிலாக ஆதிபகவானுக்கு மகவாய் அவதரித்து வாசுகியம்மையாரை மணமுடித்து அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகிய முப்பாலில் 1330 குறட்பாக்களை இயற்றிய திருவள்ளுவருக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. இங்குதான் இலுப்பைமரத்தடியில் பிறந்ததால் இலுப்பைமர அடிப்பாகம் நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. இத்திருக்கோயிலிருந்து அறுபத்திமூவர் உற்சவத்தின் போது திருவள்ளுவரையும் எழுந்திருத்து செய்வது வழக்கமாகும். தைமாதம் மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.


விமானதளம்  : சென்னை

ரயில் நிலையம் : சென்னை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​