Top >>Temples >>விஷ்ணு திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
018. மதுராந்தகம் - தமிழ்நாடு

018. மதுராந்தகம் - தமிழ்நாடு

        

மதுராந்தகம்

திருத்தல இருப்பிடம் :  இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து 23 கி.மீ தொலைவிலும் மேல்மருவத்தூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

மூலவர் : ஏரி காத்த ராமர்

தாயார் : சீதா

உற்சவர் : கருணாகரப் பெருமாள்

திருத்தல வரலாறு: சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் ராமபிரான் விபண்டக மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றுக்கொண்டார். மகரிஷியின் வேண்டுகோளுக்காக அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் கல்யாண கோலத்தில் இங்கு காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் இங்கு புஷ்பக விமானத்துடன் கோதண்டராமர் கோயில் எழுப்பப்பட்டது.

 ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே சிலைகள் அமைக்கப்படுவதுண்டு. ஆனால் இக்கோயிலின் மூலஸ்தானத்தில் சீதையின் கைகளை பற்றிய நிலையில் ராமர் நிற்கிறார். லட்சுமணன் அருகில் நிற்கிறார். ராமர் விபண்டசுரருக்கு காட்சி கொடுக்கும் போது சீதையின் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு காட்சி கொடுத்தருளினார் என்று கூறப்படுகிறது. மணமான தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ இங்குள்ள இறைவனை தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும், மூலத்தானத்திற்கு உள்ளேயே இருக்கிறார். சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிசந்நிதி உள்ளது. ஜனக மகாராஜாவின் மகளாக வளர்ந்ததால் இப்பெயர் பெற்றுது என்பர்.

 ஆனி மாதத்தில் இங்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவின் ஏழாவது நாளில் பெரிய பெருமானின் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ராமர் புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப்பெருமாள் மற்றொரு தேரிலும் செல்வர். இவ்வாறு ஒரே திருவிழாவில் இரண்டு தேர்கள் ஓடும்.

 ராமநவமி விழா இங்கு விஷேசமாக நடைபெறும். நவமியன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் அலங்கரித்த வைரமுடி தரித்த கிரீட அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் சுவாமிக்கு ஐந்து வித அலங்காரங்களுடன் விஷேச பூஜை நடைபெறும். அன்று சுவாமி சீதை, லட்சுமணருடன் தேரில் எழுந்தருளுவார்.

 குடும்ப வாழ்க்கையில் இருந்த ராமானுஜர் துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் முன்பு இங்கு தீட்சை பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக பொதுவாக காவி உடையில் காட்சிதரும் ராமானுஜர் இங்கு மட்டும் குடும்பஸ்தராக வெண்ணிற ஆடை அணிந்து காட்சி தருகிறார். மூலவர் உற்சவர் இருவரும் வெண்ணிற ஆடையுடனேயே அலங்காரம் செய்கின்றனர்.

ஏரியை காத்தவர் : ராமர் கோயிலுக்கு பின்புறம் ஒரு ஏரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி ஏரி நிரம்பி கரை உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது லயோனஸ் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்தார். அவர் ஏரிக்கரையை பலப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 ஒருசமயம் இக்கோயிலுக்கு வரும்போது அர்ச்சகர் தாயார் சந்நிதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அவர் உங்கள் தெய்வத்திற்கு சக்தி இருந்தால் அவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால் நான் அப்பணியை செய்து தருகிறேன் என்று கேட்டுக்கொண்டார். மழைக்காலம் துவங்க வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில் அவர் ஏரியை பார்வையிட சென்றார். அப்போது அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன்பிறகு ஏரி உடையவில்லை. இதைக் கண்டு மகிழ்ந்த பிளேஸ் ராம, லெட்சுமணர்களே இளைஞர்களாக வந்ததை அறிந்தார். பிறகு தாயார் சந்நிதியை கட்டிக் கொடுத்தார். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சந்நிதியில் உள்ளது. ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு ஏரி காத்த ராமர் என்ற திருப்பெயர் உண்டாயிற்று.

 கம்பராமாயணம் இயற்றிய கம்பர் அதனை அரங்கேற்றும் முன்பு ராமர் தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது ஓரிடத்தில் சிங்கம் உறுமும் சத்தம் கேட்டதும் அவ்விடத்தை பார்த்து பயந்த கம்பர் அங்கு பார்த்த போது நரசிம்மர் லட்சுமியுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் மனித முகத்துடன் சாந்த நரசிம்மர் சிலை வடிவமைக்கப்பட்டது. உற்சவரான இவரை பிரகலாத வரதன் என்கிறார்கள். சுவாதி நட்சத்திர நாளில் இவருக்கு விஷேச திருமஞ்சனம் நடக்கும்.

 இத்தலம் ராமர் தலமாக இருந்தாலும் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் கருணாகரப்பெருமாளே பிரதான மூர்த்தியாக உள்ளார். பங்குனி உத்திரத்தன்று ஜனகவல்லித் தாயாரையும், போகிப் பண்டிகையன்று ஆண்டாளையும் மணந்து கொள்பவரும் இவரே ஆவார். இங்கு வந்த ராமர் சீதையை மீட்க அருள் வேண்டி இவரை பூசித்து சென்றார். இருப்பினும் ராமருக்கு உற்சவர் வடிவம் உண்டு.

 பதினாறு கரங்களுடன் அக்கினி கிரீடம் அணிந்த சக்ரத்தாழ்வார் தனி சந்நிதியில் அமர்ந்துள்ளார். இவருக்கு கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யந்திரத்துடன் சுவாமியை தரிசிப்பது நிறைந்த பலனை தரும். இவருக்கு பின்புறம் உள்ள யோக நரசிம்மர் நாகத்தின் மீது காட்சி தருகிறார். சித்திரை நட்சத்திர நாட்களில் இச்சந்நிதியில் சுதர்சன ஹோமத்துடன் பூஜை நடக்கும்.

 ராமானுஜரும்  அவருக்கு தீட்சை கொடுத்த பெரிய நம்பியும், ஒரே சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். ராமானுஜர் தீட்சை பெறும் நிலையில் வணங்கியபடியும் பெரியதம்பி ஞானமுத்திரை காட்டியபடியும் இருக்கின்றனர். குழந்தைகள் கல்வியில் சிறப்பு பெற இவர்களை வணங்குகிறார்கள். இச்சந்நிதியில் பெரிய தம்பி பூசித்த குழந்தை கண்ணன் கையில் வெண்ணையுடன் வலதுகாலை மலர் மீது வைத்த நிலையில் காட்சி தருகிறார். மகப்பேறு இல்லாதவர்கள் இவருக்கு தொட்டில் சேவை செய்து வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

 பக்தர்களுக்கு தீட்சை தரும்போது கையில் சங்கு சக்கர முத்திரைகள் பதிப்பர். பெரியதம்பி ராமானுஜருக்கு தீட்சை கொடுக்க பயன்படுத்திய சங்கு சக்கர முத்திரைகள் இங்கு உள்ளன. 1935 ஆம் ஆண்டு கோயில் திருப்பணி நடந்த போது இம்முத்திரைகள் இங்கு கிடைத்தது. 
 

 
விமானதளம் : சென்னை

ரயில் நிலையம் : மதுராந்தகம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​