Top >>Temples >>நவ கைலாயம் - 9
3:30:05 PM         Monday, August 25, 2014 
4. குன்னத்தூர்

குன்னத்தூர்

குன்னத்தூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலி நகருக்குச் சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது

மூலவர் : கோதை பரமேஸ்வரர்

அம்பிகை : சிவகாமி அம்மன்

திருத்தலச் சிறப்புகள்: நவகயிலாயத்தில் நான்காவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் ராகு பகவான் அம்சமாக விளங்குகிறார். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளன.

மேற்கில் திருவேங்கடமுடையார் கோயில் கொண்டுள்ள மேலத் திருவேங்கடபுரம் உள்ளது. அதனால் கிழக்குப் பகுதியிலுள்ள இந்த ஊர் 'கீழத்திருவேங்கடபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. தாமிரபரணி, பச்சையாறும் இங்கு சங்கமம் ஆவதால் முற்காலத்தில் 'சங்காணி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் ஒரு சிறிய குன்று (சிறுமலை) இருப்பதால் தற்போது குன்னத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

 கோயில்களில் லிங்கங்களின் மீது நாகாபரணம் சாத்தப்பட்டிருக்கும். ஆனால் லிங்கத்திலேயே நாகம் இருப்பதை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

தலவரலாறு : இப்பகுதியில் இருந்த அதிசய மாமரத்தில் ஆண்டிற்கு ஒரு பழம் மட்டுமே விளையும். அதை அரசன் மட்டுமே உண்ணுவான். ஒருமுறை நன்றாக கனிந்திருந்த பழம் அவ்வழியே தண்ணீர் எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் பானையில் விழுந்தது. அதை அறியாத பெண் வீட்டுக்கு சென்று விட்டாள். பழத்தை காணாத அரசன் யாராவது அதை திருடியிருப்பார்கள் என்று நினைத்து, வீடு வீடாக சோதனையிட்டான். அப்பெண்ணின் வீட்டில் சோதனை செய்யும் போது, பானைக்குள் பழம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மன்னன் அப்பெண்னை விசாரிக்காமல், அவளுக்கு மரண தண்டனை வழங்கினான். அப்பாவியான பெண் சாகும் வேளையில் பசுக்கள், பெண்கள் தவிர அனைவரும் அழியட்டும் என சாபமிட்டாள். அதன்படியே அவ்வூரில் பாம்புகள் பெருகி, ஊர் மக்களை தீண்டி கொன்றது.

 மேலும் இவ்வூர் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அவர்களை மணமுடிக்க யாரும் முன்வரவில்லை. எனவே அவர்கள் தங்கள் ஊருக்கு வந்த சாபம் நீங்க சிவனை வழிபட்டனர். சிவபெருமான் பாம்புகளை தன் மார்பில் சூடி சாபவிமோசனம் தந்தார்.

 இத்தலத்து இறைவன் தன் மார்பில் பாம்பை சுமந்ததால் லிங்கத்திலும் பாம்பு இருக்கிறது ராகு அம்சம் என்பதால் லிங்கத்திற்கு நீல நிற வஸ்திரம் சார்த்துகின்றனர். இங்குள்ள பைரவரின் இடுப்பு மற்றும் மார்பிலும் தட்சிணாமூர்த்தியின் மீதும் பாம்பு வடிவம் இருக்கிறது. ராகு காலத்தில் சிவனுக்கு விஷேச பூசைகள் நடைபெறுகின்றன.

 இங்குள்ள ஆறுமுக நயினார் சிலை மிகவும் விசேஷமானதாகும். இவரது சிலையை தட்டினால் சப்தசுவர ஒலிகள் எழும். பிரகாரத்தில் கன்னி விநாயகர் கோயில் தனியாக உள்ளது சுப்பிரமணிய சுவாமி, சண்டேசுவரர், வயிரவர் ஆகியோருக்குத் தனித்தனியாக சிறிய கோயில்கள் உள்ளன.

முதல் மண்டபத்தில் அம்பாளும், இரண்டாம் மண்டபத்தில் காசி விஸ்வநாதரும், நடராஜரும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். மூன்றாம் மண்டபம் சிறியது. கருவறையே நான்காம் மண்டபம். இதில்தான் லிங்க வடிவில் கோதை பரமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : திருநெல்வேலி

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​