Top >>Temples >>நவ கைலாயம் - 9
3:30:05 PM         Monday, August 25, 2014 
1. பாபநாசம்

நவ கைலாயம் - 9

பாபநாசம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் முக்கூடல் - சேரன்மகாதேவி வழியாக  பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் பாவநாசம் எனவும் அழைக்கப்படுகிறது.
 

மூலவர் : பாவநாசர், முக்களா மூர்த்தி, பழமறைநாதர்

அம்பிகை : உலகம்பிகை

தலவிருட்சம் : முக்களா மரம்.
 
திருத்தலச் சிறப்புகள்: இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயிலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

"திங்கள் முடிசூடு மலை
தென்றல் விளையாடு மலை
தங்கு முகில்சூடு மலை
தமிழ் முனிவன் வாழு மலை"

என்று புகழ்பெற்று விளங்கும் தமிழ்மலையாம் பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

இத்தலத்தில் அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தங்கித் தவம் புரிந்த இடம். இதை 'யோக பீடம்' என்பார்கள். நவகயிலாயத்தில் முதன்மையாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சூரிய அம்சமாக விளங்குகிறார்.  விராட புருஷன் வழிபாடு செய்ததால் லிங்கத்திற்கு 'வயிராச லிங்கம்' என்று பெயர். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் மூன்று களாமரங்களாக நின்றதாலும், அதர்வன வேதம் வாயுவாக, சுவாமியை வலம் வந்ததாலும் மூர்த்திக்கு 'முக்களா மூர்த்தி' என்றும், 'பழமறைநாதர்' என்றும் பெயர்.

 மார்கழி மாதத்தில் இத்தலத்தில் கங்கை வந்து நீராடுவதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த லிங்கத்தை யார் தரிசித்தாலும் அவர்களுடைய அனைத்துப் பாவங்களையும் போக்குவதோடு அவர்கள் நினைத்ததையெல்லாம் கொடுத்தருள்வதால் இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.
 

தலபுராணம் : சிறுவயதில் அண்ணன், தங்கை தனித்தனியே பிரிந்து சென்றனர். விதிவசத்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்தனர். யாரென்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உறவு தெரிந்தது. செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடி கறுப்புப் போர்வையைச் சுற்றிக் கொண்டு முனிவர்களாகப் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டனர்.

 ஒருநாள் இறைவன் அவர்கள் கனவில் தோன்றி இந்த கறுப்புப் போர்வை எந்தத் தலத்தில் வெள்ளைப் போர்வையாக மாறுகிறதோ, அங்கு உங்கள் பாவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்றார் அதன்படி

"பொதும்பர் நிழல் குளிர் தூங்கப் 
பொலிந்த படித்துறை"

என்று புகழப்பெற்ற பாவநாசம் தாமிரபரணி படித்துறையில் அவர்கள் நீராடியதும், கறுப்புப் போர்வை வெண்போர்வையாக மாறியது. அவர்கள் பாவம் நீங்கியது. ஆதலால் இந்த தலத்துக்கு பாவநாசம் என்று பெயர் வந்தது.

இத்தலத்தில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. பலிபீடம், நந்தி, கொடிமரம் ஆகியவை உள்ளன. உள் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வடக்கு நோக்கியும், எதிர்புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியும் உள்ளனர்.

இத்தலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பொதிகைமலையிலிருந்து வரும் அகஸ்தியர் அருவி இத்தலத்தின் வழியாக செல்லும் போது தாமிரபரணி என அழைக்கப்படுகிறது.

இன்றைய சூழலில் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி மட்டுமே உள்ளது.

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : பாபநாசம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​