Top >>Temples >>சிவ திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
020. காங்கேயம் பாளையம் - தமிழ்நாடு

020. காங்கேயம் பாளையம் - தமிழ்நாடு

காங்கேயம் பாளையம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் பாளையத்தில் காவிரி ஆற்றின் மையப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஈரோடு - கரூர் செல்லும் பேருந்து பாதையில் சாவடிப்பாளையம் கூட்டு ரோட்டிலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

சுவாமி : நற்றாற்றீசர்,  அகத்தீஸ்வரர்

அம்பிகை : அன்னபூரணி, நல்லநாயகி

தீர்த்தம் : காவிரி

திருத்தலச் சிறப்புகள் : முனிவர் அகத்தியரால் வழிபட்ட இத்தலம் அகத்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது மூலவர் ஆகஸ்தீசுவரர் என்று போற்றப்படுகிறார். அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற இடம் என்பதால் பிரம்மபுரி என்றும், சிவபெருமான் எழுந்தருளியுள்ள குன்று ஓங்கார வடிவமாக அமைந்துள்ளதால் பிரணவபுரம் என்றும் இந்த திருத்தலத்திற்கு பல்வேறு சிறப்புப் பெயர்கள் உண்டு.

 இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஈசனை வணங்குவோர்க்கு மனம், வாக்கு, மெய்யால் ஏற்பட்ட தீவினைகள் முற்றிலும் அகலும் என புராணங்கள் கூறுகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தமென்னும் முறையாய்த் தொழுவோர்க்கு "ஒரு வார்த்தை சொல்வாயென் பராபரமே.." என்னும் தாயுமானவ சுவாமிகள் திருவாக்கிற்கு ஏற்றபடி முப்பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது இத்தலம். 'காங்கேய மகாத்மியம்' என்ற வடமொழி நூலில் இத்தலம் பற்றிய அரிய செய்திகள் காணப்படுகின்றன.

திருக்கயிலாயத்தில் இறைவனின் திருக்கல்யாணத்தின் போது தேவர்களும், மற்ற ஏனையர்கள் அனைவரும் வடக்கே சென்றதால் வடபாகம் தாழ்ந்து தென்பாகம் உயர்ந்தது. அதை சமன் செய்ய சிவபெருமான் அகத்தியரை அழைத்து தெற்கே செல்லுமாறு பணித்தார். அதற்கு அகத்தியர் அனைத்து ஜீவராசிகளும் தங்களின் திருக்கல்யாணத்தைக் காணும் போது எனக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லையா? என்று வேண்டினார். சிவபெருமான் நீர் இருக்கும் இடத்திலேயே எங்களது திருமண வைபவத்தைப் பார்க்கலாம் என்று ஆறுதலாக கூறினார். பிறகு தனது ஜடாமகுடத்தில் உள்ள கங்கையை கமண்டலத்தில் அடைத்து அகத்தியரிடம் கொடுத்து ஆசி கூறி பாரதத்தின் தென்திசை நோக்கி வழியனுப்பி வைத்தார்.

சீர்காழியில் சூரபத்மனின் கொடுமையால் தேவர்கள் மறைந்து, வாழ்ந்து சிவ வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் வழிபாட்டுக்கான தண்ணீர் நந்தவனங்களில் கிடைக்காததால் பெரிதும் துன்புற்றார்கள். உடனே விநாயகரை வழிபட்டு அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள கங்கை நீரை பூமிக்கு வரவழைக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்தார்கள். அவர்களது வேண்டுகோளைக் கேட்ட விநாயகர் அவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆடு மேய்க்கும் இடைச்சிறுவனாக உருமாறி குடகு மலைக்கு வந்தார். அவ்வழியாக வந்த அகத்தியர் அச்சிறுவனிடம் கமண்டலத்தை கொடுத்து, நான் மாலை வழிபாட்டை முடித்து விட்டு வரும் வரை இதனைப் பார்த்துக் கொள். எக்காரணம் கொண்டும் இதை தரையில் மட்டும் வைக்காதே என்று கேட்டுக் கொண்டார்.

அச்சிறுவனோ நான் மூன்று முறை தங்களை அழைப்பேன் அதற்குள் தாங்கள் வந்து கமண்டலத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல, அகத்தியரும் சம்மதிக்கிறார். அகத்தியர் அந்த பக்கம் சென்ற உடனேயே விநாயகர் மூன்று முறை அழைத்துவிட்டு கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டார். திரும்பி வந்தபோது அகத்தியர் கமண்டலம் தரையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். கோபத்துடன் சிறுவன் தலை மீது மூன்று முறை குட்டினார். பளிச்சென்று மறைந்த சிறுவன் காக வடிவம் எடுத்து கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். கமண்டல நீர் பெரு நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு விநாயகர் தனது சுயரூப தரிசனத்தைக் காட்டினார். பெருஞ்சோதியாக காட்சி தந்த விநாயகரை கண்டு வணங்கி, ஐயனே! தங்கள் தலையிலா குட்டி விட்டேன்! என்னை மன்னித்தருள வேண்டும் என்று வருந்தியதோடு தன் தலையிலும் குட்டிக் கொண்டார்.

அப்போது விநாயகர் வருந்தாதீர்கள் அகத்தியரே! இப்போது தாங்கள் தங்கள் தலையில் குட்டிக் கொண்டது போல்  என் பக்தர்கள் என் முன்நின்று மூன்று முறை குட்டிக்கொண்டு வழிபட்டால் அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் வழங்குவேன் என்று கூறி மறைந்தார்.

அதன்பின் அகத்தியர் காவிரி நதி சென்ற வழியில் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் சென்று வழிபட்டார். காவிரி வழியாக தெற்கே வந்தபோது வாதாபி, வில்வலன் என்ற இரு அரக்கர்கள் எதிர்பட்டார்கள். இவ்விடத்திற்கு வருபவர்கள் தன்னை உண்ணும் வகையில் வாதாபி என்ற அரக்கன் தோன்றுவான். அவனை அவர்கள் உண்டபின் வில்வலன் வயிற்றுக்குள் போன வாதாபியை அழைப்பான். உணவு உண்டவரின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வாதாபி என்ற அரக்கன் வெளியே வருவான். பிறகு அந்த இருவரும் இவ்வாறு இறந்தவர்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள். அதே உத்தியை அந்த அரக்கர்கள் அகத்தியரிடமும் கையாண்டார்கள். ஆனால் அவர்களது நோக்கம் அறிந்த முனிவர் வாதாபி தன் வயிற்றுக்குள் போன போது சிவமந்திரத்தைச் சொல்லி வாதாபி ஜீரணோத்பவ என்று கூறி வயிற்றைத் தடவிக்கொள்ள வாதாபி அரக்கன் அப்படியே ஜீரணமாகிவிட்டான். வெளியில் உள்ள வில்வலனையும் தர்ப்பைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தைச் சொல்லி அவன் மீது வீசி அவனையும் சம்ஹாரம் செய்தார்.

இவ்விரு அரக்கர்களை கொன்றதால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் விலக சிவபூசை செய்வதுதான் சரி என்றுணர்ந்த அகத்தியர் அவ்வாறே சிவபூசை செய்ய ஆயத்தமானார். அங்கிருந்த மணலையே சிவலிங்கமாகச் செய்து தனது ருத்ராட்ச மாலையை அந்த லிங்கத்தில் சாற்றி வழிபட்டார். வழிபாடு முடிந்தவுடன் ருத்ராட்ச மாலையை எடுக்க முயன்றார். ஆனால் எடுக்க முடியவில்லை. அதையறிந்த அகத்தியர் எனது பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்காக மட்டும் சிவபெருமான் இங்கு அமரவில்லை. இங்கு வரும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் வளம் சேர்க்கதான் அமர்ந்திருக்கிறார் என்று அமைதியடைந்து அவ்விடத்தை விட்டு தெற்கு நோக்கி சென்றார்.

காவிரி தான் உற்பத்தியாகும் குடகு முதல் தான் சங்கமிக்கும் காவிரிப் பூம்பட்டினம் வழியில் மத்தியில் இந்த திருக்கோயில் உள்ளது. மத்திய பாகமாக கருதப்படும் கொக்கராயன்பேட்டை முதல் மொளசி வரை ஐந்து சிவாலயங்கள் உள்ளன. கொக்கரையன்பேட்டை குக்குடநாத சுவாமி கோயில் சாத்தம்பூர் வள்ளலீஸ்வரர் கோயில் மன்னாதம்பாளையம், மத்யபுரீஸ்வரர் கோயில் மொளசி முக்கண் ஈஸ்வரர் கோயில் ஆகிய நான்கும் காவிரியின் தென்புறம் இரண்டும், வலப்புறம் இரண்டும் ஆற்றின் நடுவில் நட்டாற்றீசர் ஆலயமும் அமைந்துள்ளன.

இவ்வாலயம் கந்த புராணத்தில் ஸ்வேத மலை என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாலயம் ஓம் என்ற ஓங்கார வடிவில் அமைந்துள்ளது என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாலயத்தில் உள்ள சிவன் நல்லநாயகி உடனமர் நட்டாற்றீசர் மற்றும் அன்னபூரணி சமேத அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்கள் கொண்டுள்ளார். அம்பாள் சந்நிதி சிவனுக்கு வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் சுந்தர சக்தியாக விளங்குகின்றாள். முருகன் தெற்கு நோக்கி வலக்காலை முன் வைத்தும், நடக்கும் பாவனையில் காட்சி அளிக்கிறார். வலக்கையில் வேல், இடக்கை இடுப்பில் வைத்து காட்சி அளிக்கிறார். இவ்வாலயத்திலுள்ள விஷ்ணு துர்க்கையை வழிபடும் இளைஞர்களுக்கு வெகு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள்.

நவக்கிரகம்,  சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் மற்றும் பைரவர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. இத்தல பைரவரின் சிலை ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை மிக்கது என்று சொல்லப்படுகிறது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் விசேஷ சிறப்பு அலங்காரத்தில் ஈசனையும், அம்பாள் அன்னபூரணியையும் நாம் தரிசித்து மகிழலாம்.
 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : ஈரோடு

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​