Top >>Temples >>சிவ திருத்தலங்கள்
3:30:05 PM         Monday, August 25, 2014 
019. திருவாதவூர் - தமிழ்நாடு

019. திருவாதவூர் - தமிழ்நாடு

திருவாதவூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் தலைநகரான மதுரையிலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் செல்கின்றன.

மூலவர்  : திருமறைநாதர், வேதபுரீஸ்வரர், வாதபுரீசுவரர் 

தாயார்  : ஆரணவல்லி

தீர்த்தம் : சப்த தீர்த்தங்கள்.

திருத்தல புராணம் : தேவர்களை துன்புறுத்திய அசுரர்களையும், அசுரகுரு சுக்கராச்சாரியாரின் தாயாரையும் மகாவிஷ்ணு அழித்தார். இந்த தோஷம் நீங்க இங்கு தடாகத்தின் வடிவில் சிவனை வழிபட்டார். சிவபெருமான் தாமரையின் மத்தியில் வேதநாதம் ஒலிக்க, எழுந்தருளி அவரது பாவம் போக்கியருளினார். இதனால் இவர் வேதபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இப்பெயரே திருமறைநாதர் என்று அழைக்கப்படுகிறது. இது தேவார வைப்புத் தலமாகும்.

 படைப்புத் தொழில் சிறப்பாக நடக்க பிரம்மா இங்கு ஆரண கேதம் என்னும் யாகம் நடத்தினார். அவரது தவத்திற்கு அவரது துணைவியார் சரஸ்வதி, காயத்திரி, சாவித்திரி ஆகியோர் துணையாக இருந்தனர். பிரம்மாவிற்கு காட்சி கொடுத்த அம்பிகை படைப்புத் தொழில் சிறக்க அருளினாள். யாகத்தின் காரணமாக காட்சி தந்ததால் ஆரணவல்லி என்ற பெயர் பெற்றாள்

 பாண்டவர்கள் தங்களது தந்தையின் நன்மை கருதி நாரதரின் ஆலோசனைப்படி, ராஜசூய யாகம் நடத்த எண்ணினர். யாகத்திற்கு பொருள் வேண்டி அவர்கள் பல இடங்களுக்கும் சென்றனர். குபேரபட்டணம் சென்ற பீமன் குபேர நந்தவனத்தில் மனிதன், விலங்கு சேர்ந்த வடிவில் புருஷாமிருகம் இருந்ததை அறிந்தார். அதன் பலமறிந்த பீமன் யாகத்திற்கு உதவி செய்ய வரும்படி அழைத்தார். அந்த மிருகம் அவனிடம் பீமா! என் சிந்தையில் எப்போதும் சிவன் இருக்கிறார். நீ முன்னே செல்ல, நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன். எந்த நிலையிலாவது நான் உன்னை நெருங்கிவிட்டால் என் சிவதியானத்திற்கு இடையூராக அமைந்துவிடும். அப்போது நான் உன்னை பிடித்துக் கொல்வேன். எனவே அவ்வாறு நடந்து கொள்ளாதே! என்ற நிபந்தனையுடன் பின்தொடர்ந்தது. புருஷாமிருகம் தன்னை நெருங்கும் போதெல்லாம் பீமன் விஷ்ணு கொடுத்த மந்திரக்கல்லை எறிந்தான். அங்கு தீர்த்தத்துடன் சிவலிங்கம் தோன்றியது. புருஷாமிருகம் அங்கு சிவனை வழிபட்டது. அந்நேரத்தை பயன்படுத்திக்கொண்டு பீமன் தன் ஓட்டத்தை அதிகப்படுத்தினான். இவ்வாறு உருவான சிவாலயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. பீமன் ஓடியதன் அடிப்படையில் சிவராத்திரி அன்று  இங்கு 'சிவாலய ஓட்டம்' என்னும் வழிபாடு நடக்கிறது.

 யாகத்திற்கு உதவிய புருஷாமிருகம் மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி இத்தலத்திலுள்ள விஷ்ணு தீர்த்தத்தின் நடுவில் தங்கிவிட்டது.

 சிவராத்திரியன்று இங்குள்ள சிவனையும், புருஷாமிருகத்தையும் தரிசிப்பது நல்லது.

 இத்தலம் திருவாசகம் தந்த மாணிக்கவாசர் பிறந்த தலம். இவ்வூரில் வசித்த சம்புபாதசிரியரின் மகனாக பிறந்த இவர் அரிமர்த்தன் பாண்டிய மன்னனின் அமைச்சராகப் பணியாற்றினார். திருப்பெருந்துறையில் சிவனிடம் உபதேசம் பெற்று திருவாசகம் பாடினார். ஈசனால் மாணிக்கவாசகர் என பெயர் சூட்டப்பட்டார். இவருக்கு சந்நிதி இருக்கிறது. மதுரையில் நடக்கும் பிட்டுக்கு மண் சுமக்கும் விழாவிற்கு இவரே செல்வார்.  மார்கழியில் இவருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று நடராஜர் மாணிக்கவாசகருக்கு விஷேச பூசை நடக்கும். விழாவின் 9ம் நாளில் மாணிக்கவாசகர் தேரில் புறப்பாடாவார். மாணிக்கவாசகர் பிறந்த பிறந்த இடத்தில் அவருக்கென தனிக்கோயில் உள்ளது. கோயில்களில் விஜயதசமியன்று அம்பிகை எழுந்தருளி அம்பு போடுவாள். ஆனால் இக்கோயிலில் அம்பிகைக்கு பதிலாக மாணிக்கவாசகரே அம்பு போடுகிறார். கார்த்திகை மாதத்தில் மாணிக்கவாசகர் முன்னிலையில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

 புரட்டாசி 3ம் சனிக்கிழமையன்று புருஷாமிருகத்திற்கு கருப்பு என்னும் மருந்து சாத்தும் வைபவம் நடக்கிறது. இதற்காக பல தேங்காய்களை தீயிலிட்டு எரிப்பர். அதில் கிடைக்கும் கரித்துகள்களில் நல்லெண்ணெய் சேர்த்து இந்த சுவையை தயாரிப்பர். இப்பகுதியில் வறட்சி ஏற்படும் போதும் மழை பெய்ய வேண்டி கருப்பு சாத்தி வழிபடும் வழக்கம் உள்ளது

 பெளர்ணமி  அமாவாசை நாட்களில் பிரம்மா தன் தேவியருடன் இங்கு அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். கல்வியில் சிறப்பிடம் பெற விரும்புவோர்கள் இந்நாளில் அம்பாள் சந்நிதியில் நெய் தீபம் ஏந்தி வேண்டிக்கொள்கிறார்கள்.

 கடைச்சங்க புலவர்களில் ஒருவராக கபிலர் பிறந்த திருவூரிது. கபிலருக்கு இங்கு தனிச்சந்நிதி உள்ளது கையில் சுவடி வைத்திருக்கும் இவரது பெயரில் ஒரு தீர்த்தமும் உள்ளது. தினமும் சுவாமிக்கு பூசை நடக்கும் வேளையில் இவருக்கும் நைவேத்யம் செய்து பூசை செய்யப்படுகிறது

 சிவனின் அம்சமான பைரவர் வேதத்தின் வடிவமான நாயுடன்தான் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவருக்கு நாயும் இல்லை. சூலமும் இல்லை. இத்தலத்தில் சிவன் வேதத்தின் வடிவில் அருளுவதால் நாய் வாகனம் இல்லை. இங்குள்ள விநாயகர் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார்.

 கோயிலின் பின்புறம் விஷ்ணு தீர்த்தம் உள்ளது மகாவிஷ்ணு இங்கு நீர் வடிவில் இருப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பிரம்ம தீர்த்தம், சிவன் தீர்த்தம், அக்னி தீர்த்தம், பைரவர் தீர்த்தம், வாயு தீர்த்தம் மற்றும் கபில தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. இவ்வாறு சப்த தீர்த்தங்களுடன் இத்தலம் விளங்குகிறது.

 நடராஜர் தனிசந்நிதியில் தெற்கு நோக்கியிருக்கிறார். அருகில் சிவகாமி அம்பிகை, காரைக்கால் அம்மையார், பதஞ்சலி வியாக்கிரபாதர் உள்ளனர். இவர்களுடன் அரிமாத்தன் பாண்டிய மன்னனும் இருக்கிறான். இங்கு தன்னை வழிபட்ட மாணிக்கவாசகருக்கு தனது நடனத்தின் போது எழும் பாத சலங்கையின் ஓசை கேட்கும் படி செய்தார். மாணிக்கவாசகர் சிலம்பொலி கேட்ட இடத்தில் ஒரு மண்டபம் கட்டினார். இம்மண்டபத்திற்கு 'சிலம்போசை மண்டபம்' என்று பெயர் சூட்டப்பட்டது.

 மகரிஷியான மாண்டவ்யர் தவத்தில் இருந்தபோது சனிபகவானின் சஞ்சாரத்தால் துன்பத்திற்கு ஆளானார். எனவே அவர் சனீஸ்வரனின் கால் முடமாகும்படி சபித்து விட்டார். இதற்கு விமோசனம் வேண்டி சூரியனின் ஆலோசனைப்படி சனீஸ்வரர் இங்கு சிவனை வழிபட்டு நிவர்த்தி பெற்றார். இதனால் சிவனுக்கு வாதபுரீசுவரர் என்றும் பெயர் உண்டு. தீராத பிணி உள்ளவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சனீஸ்வரருக்கு எள், தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள். இவர் கைகளில் தண்டம் சூலம் வைத்து காகத்தின் மீது கால் வைத்த நிலையில் காட்சி தருகிறார். கிரக தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு வரலாம்.

தலபுராணம் : மதுரையை ஆண்ட அரிமர்த்தன் மன்னன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் பரிகளை வாங்க மாணிக்கவாசகரிடம் பணம் கொடுத்து அனுப்பினார். சிவ பக்தி கொண்ட மாணிக்கவாசகர் பரிகளை வாங்க நாகப்பட்டினம் சென்றார். அங்கு கப்பல் வர தாமதமான காரணத்தால் அவர் அமைத்த சிவாலய கட்டிடப்பணிக்காக செலவு செய்தார்.

 சிறிது நாட்கள் கழித்து துறைமுகத்திற்கு கப்பல் வந்து சென்றதை அறிந்த மன்னன் மாணிக்கவாசகரை அழைத்து வினவினார். அதற்கு மாணிக்கவாசகர் பரிகளை வாங்கிவிட்டதாகவும், இன்றே வந்துவிடும் என்று கூறினார். மன்னன் மாணிக்காசகரை சிறையிலிட்டார். மாணிக்கவாசகர் இறைவனை மனமுருகி வேண்ட இறைவன் நரிகளை பரிகளாக்கி அனுப்பி, இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம்.

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : மதுரை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​